என் மீதான குற்றச்சாட்டை முதல்வர் பழனிசாமி நிரூபிக்காவிட்டால் பதவி விலக தயாரா? -துரைமுருகன் கேள்வி

என் மீதான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி நிரூபிக்காவிட்டால் பதவி விலக தயாரா? என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2019-05-03 09:15 GMT
சென்னை,

தனக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைக் கூறுவதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

சோதனையில் 12 கிலோ தங்கம் 13 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக முதலமைச்சர் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். தங்கள் வீடு மற்றும் கல்லூரியில் வருமான வரித்துறையினர் 10 லட்சம் ரூபாய் மட்டுமே எடுத்துச் சென்றதாகவும், 13 கோடி ரூபாய் எடுக்கப்பட்டது எங்களுடைய இடம் அல்ல.

சோதனையில் எங்குமே தங்கம் கைப்பற்றப்படவில்லை என்பது வருமானவரித்துறை ஆவணத்தைப் பார்த்தாலே தெரியும். எல்லாவற்றையும் அறிந்துகொள்ளக் கூடிய இடத்தில் அமர்ந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏதும் அறியாத சராசரி மனிதனைப் போல பேசியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

தமது வீட்டில் 12 கிலோ தங்கம் 13 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக முதலமைச்சர் நிரூபித்தால் தான் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும், இல்லையெனில் முதலமைச்சர் பதவி விலகத் தயாரா எனவும் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்