தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல் கைது திடுக்கிடும் தகவல்கள்

தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலை ‘கியூ’ பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Update: 2019-05-11 22:00 GMT
சென்னை,

போலி பாஸ்போர்ட் ஒழிப்பு நடவடிக்கைகளில் ‘கியூ’ பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அவர்கள் அனைவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தீவிர விசாரணைக்கு பின்னர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர் சென்னை வந்து சென்றதும், அதன் தொடர்ச்சியாக ‘கியூ’ பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்கு வந்த இலங்கையை சேர்ந்த தனூக ரோசன் என்பரையும் பூந்தமல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏராளமானோர் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிபட்டுள்ளவர்களிடம் ‘கியூ’ பிரிவு போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அப்போது போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் திருச்சியை சேர்ந்த கலையரசி என்ற பெண் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவருக்கு உதவியாக ராதாகிருஷ்ணன் என்பவரும் ஈடுபட்டுள்ளார். இவர் ஒரு கட்சியின் மாவட்ட நிர்வாகியாக இருக்கிறார். மேலும் அச்சு அசலாக போலி பாஸ்போர்ட்டை தயாரிப்பதற்கு கிருபா, நிமலன், உதயகுமார் உள்பட இலங்கையை சேர்ந்த 3 பேரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை, திருச்சி, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 13 பேரை ‘கியூ’ பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் போலியாக பாஸ்போர்ட் தயாரித்து ஒரு பாஸ்போர்ட்டுக்கு ரூ.5 ஆயிரம் என ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்துள்ளனர். இவர்கள் தயாரித்து கொடுத்த போலி பாஸ்போர்ட்கள் மூலம் இதுவரை ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

இவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள், போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு?

கைது செய்யப்பட்ட கலையரசி, ராதாகிருஷ்ணன், கிருபா உள்பட 13 பேரை சென்னை சைதாப்பேட்டை 12-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சண்முகப்பிரியா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் அவர்கள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை பலர் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்