மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்க நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்க நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2019-05-13 23:15 GMT
சென்னை,

சென்னை சாலிகிராமத்தில் தே.மு.தி.க. சார்பில் தண்ணீர் பந்தலை கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் முக்கிய பிரச்சினையாக தண்ணீர் பிரச்சினை உள்ளது. மழைக்காலத்தில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் வீணாய் கடலில் கலக்கிறது. கோடை காலம் வந்ததும் தமிழகம் முழுவதும் எங்கும் தண்ணீர் இல்லை என்று சொல்வதை நாம் ஆண்டு தோறும் பார்க்கிறோம்.

நீர் நிலைகளில் தூர்வாருதல்

மக்கள் சார்பாக என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், உடனடியாக அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்க தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும். உடனடி நிவாரணமாக குடிநீர் லாரிகளில் அனைத்து இடங்களிலும் தண்ணீரை வழங்க வேண்டும்.

தற்போது நிலத்தடி நீர் எங்கும் இல்லை என்ற நிலைமையை நாம் பார்க்கிறோம். இதற்கு தான் நதிகள் இணைப்பு என்பது தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதுக்கும் ஒரு சிறப்பான திட்டம் என்று நாங்கள் கூறி வருகிறோம். எங்கள் கூட்டணியின் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்கும் போது, பிரதமரை சந்தித்து நதிநீர் இணைப்பை உறுதியாக கொண்டுவர நாங்கள் வலியுறுத்துவோம்.

நதிநீர் இணைப்பு

நதிநீர் இணைப்பு திட்டம் வந்துவிட்டாலே தமிழகத்தில் விவசாயம், குடிநீர், தொழில்நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீருக்கு நாம் தன்னிறைவு பெற முடியும். ஒரு காலத்தில் மின்சாரம் இல்லாமல் தமிழகம் மிகவும் சிரமப்பட்டது. இன்று தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.

அதுபோல் தற்போது தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்துவோம்.

வெறும் சடங்கு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு சாதாரணமான ஒன்று தான். இதில் முக்கியத்துவம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. வரப்போகும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க போகிறது என்பதற்கு முன்கூட்டியே அவர்கள் திட்டமிடுகிறார்கள்.

எங்களை பொறுத்தவரையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திலும், தேசிய அளவிலும் அமோக வெற்றி பெறும். பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்பார். 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று இந்த ஆட்சி தொடரும். எனவே மு.க.ஸ்டாலின்-சந்திரசேகர் ராவ் சந்திப்பை வெறும் சடங்காகவே நான் பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்