சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி: தி.மு.க.வுக்கு கூடுதலாக ஒரு மாநிலங்களவை எம்.பி.

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில், 13 தொகுதிகளை தி.மு.க., வென்றுள்ளது.

Update: 2019-05-24 23:19 GMT
சென்னை, 

தி.மு.க., கூட்டணியில் தமிழக சட்டசபையில் ஏற்கனவே 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த எம்.எல்.ஏ.க்கள் மூலம் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு 2 உறுப்பினர்களை (எம்.பி.க்களை) மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்ற நிலை தி.மு.க. கூட்டணிக்கு இருந்தது. (ஒரு மாநிலங்களவை உறுப்பினரை, 36 எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வார்கள்)

தற்போது, கூடுதலாக 13 எம்.எல்.ஏ.க்களை பெற்றதை தொடர்ந்து, சட்டசபையில் தி.மு.க. கூட்டணியின் பலம் 110-ஆக உயர்ந்துள்ளது. எனவே, கூடுதலாக ஒரு எம்.பி.யை தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் 122 பேர் (சபாநாயகரை தவிர) உள்ளனர். அதனால், அ.தி.மு.க.வினராலும் 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.

தற்போது கூடுதலாக 13 எம்.எல்.ஏ.க்களை பெற்ற வகையில், தி.மு.க., ஏற்கனவே வாக்களித்தப்படி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒரு இடத்தையும், காங்கிரசுக்காக (முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்) ஒரு இடத்தையும் அளிக்கும். மீதமுள்ள ஒரு இடத்தை தனது கட்சியினர் யாருக்காவது தி.மு.க. அளிக்கும்.

அதேநேரம், தமிழகத்தை சேர்ந்த கனிமொழி, டி.ராஜா, மைத்ரேயன் உட்பட 6 டெல்லி மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் அடுத்த மாதம் முடியும் தருவாயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்