தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது - டிடிவி தினகரன்

தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

Update: 2019-06-01 11:07 GMT
சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது.

கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை வகித்தார்.- கூட்டத்தில் வெற்றிவேல், செந்தமிழன், தங்க தமிழ் செல்வன், பழனியப்பன் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மாவட்ட வாரியாக கட்சிக்கு கிடைத்த வாக்குகள் சதவீதம் குறித்து நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரும் காலங்களில் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கினார்.

அடுத்து வரும் தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் பெருவாரியான வெற்றிகளை பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் தீர்ப்பை ஏற்று, தொடர்ந்து மக்கள் நலனுக்காக பாடுபடுவோம். தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது.  திமுகவும், அதிமுகவும் கூட தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் கட்டாயமாக்குவது தவறான செயல், அதனை திணித்தால் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  மத்திய அரசு முடிவை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்