கேரளாவில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை : நாளை பலத்த மழை பெய்யும் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

கேரளாவில் நாளை பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Update: 2019-06-07 06:46 GMT
திருவனந்தபுரம்,

தென்மேற்கு பருவமழைதான், இந்தியாவின் நீண்ட கால பருவமழையாகும். வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் இந்த மழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஒரு சில முறை செப்டம்பர் மாதத்தை தாண்டியும் தென்மேற்கு பருவ மழை நீடிக்கும்.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பெரிய நீராதாரம் இந்த தென்மேற்கு பருவமழைதான். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இருக்கும்.

தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்திலும் ஓர் அளவு மழை பொழிவு கிடைக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் போதுமான அளவு பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை எதிர்பார்த்து விவசாயிகளும், பொதுமக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

வழக்கமாக கேரளாவில் மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் 5-ந்தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை நாளை (8-ந்தேதி) கேரளாவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளிலும்  கேரள மாநிலத்தின் கடலோர மாவட்டம் மற்றும் பல பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்