இலங்கை தொடர் குண்டு வெடிப்பு; கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

Update: 2019-06-12 14:27 GMT
இலங்கையில் ஈஸ்டர் தினத்தின் போது கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தொடர் வெடிகுண்டுகள் நடத்தப்பட்டது. இதில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இலங்கையை இந்தியா எச்சரித்தது. ஆனால் இலங்கை அலட்சியமாக இருந்ததால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. 

கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணையை மேற்கொண்ட போது கிடைத்த தகவலை கொண்டே இலங்கைக்கு இந்தியா பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது என தகவல் வெளியாகியது.

கேரளாவில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற 20-க்கும் மேற்பட்டோர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று கோவையை சேர்ந்தவர்களும் பயங்கரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டதாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஜக்ரான் ஹசிமின் பிரசார பேச்சால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் ஈர்க்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் சோதனை மேற்கொண்ட போது 14 மொபைல் போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப் டாப்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்ட்டிஸ்க், பிரசார துண்டு காகிதங்கள் மற்றும் பிற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தென்னிந்தியாவில் கோவை மற்றும் கேரளாவில் ஐ.எஸ். ஆதரவாளர்களின் செயல்பாட்டை தேசிய புலனாய்வு பிரிவு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இலங்கை தாக்குதலை அடுத்து அதிரடி சோதனையில் 6 பேருக்கு இலங்கை தாக்குதலில் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களை தேசிய புலனாய்வு பிரிவு விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கும் என தெரிகிறது. மேலும் சிலருக்கு சம்மன் விடுக்கவும் திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்