சென்னையில் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் பஸ்ஸில் இருந்து கொத்தாக கீழே விழும் கல்லூரி மாணவர்கள்...!

சென்னையில் தடையை மீறி 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2019-06-18 05:15 GMT
சென்னை,

சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரி , நியூ கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள்  கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் நியூ கல்லூரி மாணவர்கள் முக்கிய சாலைகளில் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ஆவடியிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லக்கூடிய 40A என்ற பேருந்தின் கூரை மீது ஏறி ஆபத்தான முறையில் நின்று கொண்டும், மிகப்பெரிய பேனர்களை வைத்து கொண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அமைந்தகரை காவல்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீசார்  'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
பேருந்து கூரையின் முன் பகுதியில் ஏராளமான மாணவர்கள் அமர்ந்து கொண்டு அதன் ஆபத்தை உணராமல் பயணித்தனர். அவ்வாறு வந்த பேருந்து ஒன்று பிரேக் போடும்போது பேருந்து மேற்கூரையின் முன்புறம் இருந்த மாணவர்கள் கீழே விழுந்து அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஓடும் பேருந்திலிருந்து அதன் முன்புறம் விழுந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வண்ணாரப்பேட்டை பகுதியில் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 7 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்