பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு ஏதுவாக சென்னையில், ரூ.389 கோடியில் ‘மத்திய சதுக்க திட்டம்’ ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு ஏதுவாக சென்னையில் ரூ.389 கோடி செலவில் தொடங்கப்பட்டிருக்கும் மத்திய சதுக்க திட்டம் தொடர்பான பணிகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

Update: 2019-06-24 22:15 GMT
சென்னை,

பயணிகள் ஒரு போக்குவரத்தில் இருந்து இன்னொரு போக்குவரத்துக்கு சிரமமின்றி செல்வதற்காக சென்னை சென்டிரலில் மத்திய சதுக்கம் அமைக்கலாம் என்று 2014-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதி உதவியுடன் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் ரூ.389 கோடி செலவில் சென்னை சென்டிரல் பகுதி மத்திய சதுக்க திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த புதிய திட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த நடைபாதை பயணிகள் பயன்படுத்தும் புல்வெளி பூங்கா, அனைத்து பஸ்-ரெயில் போக்குவரத்துகளின் ஒருங்கிணைப்பு, நிலத்தடி வாகன நிறுத்தம், மாநகர பஸ் நிறுத்துமிடம், பயணிகள் சுரங்கப்பாதை உள்ளிட்டவை அடங்கும். இந்த திட்டத்துக்காக வாயன்ட்ஸ் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனம் செய்யப்பட்டு, கடந்த 19.9.2016 அன்று ஏற்பு கடிதம் வழங்கப்பட்டது.

மெட்ரோ ரெயில் நிறுவனம்

இந்த திட்டத்தை செயல்படுத்துதல், பராமரித்தல் மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசால் கடந்த 15.9.2015 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் உத்தேச மேம்பாட்டு பணிகளை பரிசீலனை செய்த தலைமை செயலாளர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது.

விரிவான திட்டம் மற்றும் மதிப்பீடுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைப்புகளை கலந்து ஆலோசித்து மெட்ரோ ரெயில் நிறுவனமே தயாரிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

இந்தநிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும கூட்டரங்கில், சென்னை சென்டிரல் பகுதி ‘மத்திய சதுக்க திட்டம்’ குறித்து ஆய்வு கூட்டம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது. அரசு முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சல் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

இதில் மத்திய சதுக்க திட்ட கருத்தாய்வு, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் போன்றவை குறித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வினை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டத்துக்கான மேம்பாட்டு பணிகளை தொடங்க இருக்கிறது.

மேலும் செய்திகள்