‘புதிய மின் திட்டப்பணிகளை விரைந்து முடியுங்கள்’ அமைச்சர் தங்கமணி உத்தரவு

புதிய மின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.தங்கமணி உத்தரவிட்டார்.

Update: 2019-06-25 23:08 GMT
சென்னை,

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில், மின்வாரிய துறை அமைச்சர் பி.தங்கமணி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். வாரிய தலைவர் விக்ரம் கபூர், இணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் சுபோத்குமார் மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.

மின் உற்பத்தியை மேம்படுத்துவது, செலவினங்களை குறைப்பதற்கான வழிமுறைகள் கடைபிடிப்பது, நீர் ஆதாரத்தை மேம்படுத்துவது, சுற்றுச்சூழலில் உள்ள கரியமில வாயுவின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொள்வது, அனைத்து அனல் மின் உற்பத்தி நிலையங்களில் அதிக மரக்கன்றுகளை நட்டு அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

மின் திட்டங்கள்

வட சென்னை அனல் மின் திட்டம் நிலை-3, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம், உப்பூர் அனல் மின் திட்டம், உடன்குடி அனல் மின் திட்டம் நிலை-1, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம், குந்தா நீரேற்று புனல் மின் திட்டம், கொல்லிமலை நீர் மின்திட்டம் ஆகிய புதிய மின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மத்திய கப்பல் துறையின் கீழ் இயங்கும் கொல்கத்தா துறைமுக பொறுப்பு கழகம், ஹால்டியா துறைமுகத்தில் 2018-2019-ம் நிதியாண்டில், அதிக அளவில் 25.30 லட்சம் டன் நிலக்கரியை கையாண்டதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அமைச்சரிடம், அதிகாரிகள் காண்பித்து பாராட்டு பெற்றனர்.

புதிய அரங்கு

வடசென்னை அனல் மின் திட்டம் நிலை-3 திட்டத்திற்கு கருத்தரங்கு நடத்தும் வசதி கொண்ட புதிய அரங்கை அமைச்சர், சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சியில் தொடங்கிவைத்தார்.

ஆய்வு கூட்டத்தில் இயக்குனர் (உற்பத்தி) எம்.சந்திரசேகர், தலைமை பொறியாளர் (நிலக்கரி) நா.சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்