ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் ‘பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும்’ நீதிபதிகள் கருத்து

பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறினர்.

Update: 2019-06-26 20:50 GMT
சென்னை,

சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை தமிழக அரசு அகற்றுவது இல்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர், தமிழக அரசின் செயல்களுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது, சட்டவிரோத பேனர்களை அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் காலஅவகாசம் கேட்டதால், அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேனர்கள் அச்சிடுவதை தடுக்க அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து பேனர்களை அச்சிடும் நிறுவனங்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளன. அந்த வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும். அது ஐகோர்ட்டின் வேலை இல்லை’ என்றனர். பின்னர், ‘இப்போது எல்லாம் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் போன்றவர்களின் பேனர்களை தினந்தோறும் சாலைகளில் அதிக அளவில் பார்க்க முடிகிறது’ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘பேனர் வழக்கு குறித்து தலைமை செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன்’ என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 1-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்