ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், இளைஞர்களுக்காக புதிய அறக்கட்டளை சிறந்த சமூகத்தை உருவாக்க திட்டம்

ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், இளைஞர்களுக்காக ‘வருண் அறக்கட்டளை’ என்ற பெயரில் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. சிறந்த சமூகத்தை உருவாக்க இந்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

Update: 2019-06-28 22:45 GMT
சென்னை,

தென்னிந்தியாவின் மிக முக்கியமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ரேடியன்ஸ் ரியால்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் ‘வருண் அறக்கட்டளை’ என்ற பெயரில் புதிய அறக்கட்டளையை தொடங்கி உள்ளது.

ரேடியன்ஸ் ரியால்டி டெவலப்பர் நிறுவன நிர்வாக இயக்குனர் வருண் மணியன் பெயரில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு இந்த அறக்கட்டளை ஆதரவளித்து அவர்களுக்கான எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும். இச்சமூகத்தினரின் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் வருண் அறக்கட்டளை பூர்த்தி செய்யும்.

சவால்களுக்கு தீர்வு

வருவாய் நோக்கற்ற இந்த அறக்கட்டளையானது வாடுகின்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் சமூகத்தினரின் நிலையான வளர்ச்சிக்கும் சிறந்த மாற்றத்திற்கும் வழிவகுக்கும். இந்த அறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள் சிறப்பான, செழிப்பான மற்றும் ஒத்துழைப்பு தரும் ஒரு சமூகத்தை உருவாக்கி அதன் சவால்களுக்குத் தீர்வு காண்பதாகும்.

சமூகத்தின் தேவை, சவால்கள் ஆகியவை குறித்து விரிவான ஒரு ஆய்வை மேற்கொண்ட பின்னர், பட்டினப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினரை வருண் அறக்கட்டளை தேர்ந்தெடுத்துள்ளது.

வேலைவாய்ப்புத் திறன், நிதி ஆதாரம் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு ஆகியன இங்குள்ள மக்களுக்கு முதன்மையான சவாலாக இருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்த விளையாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்த வருண் அறக்கட்டளை முடிவு செய்தது.

விளையாட்டு போட்டி

அதன்படி, இந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட், கபடி, கால்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பட்டினப்பாக்கத்தின் பல்வேறு குப்பங்களைச் சேர்ந்த அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வருண் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வருண் மணியன் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்.

விளையாட்டு போட்டிகளுக்கு பின்னர் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை மேம்படுத்துவதிலும் வருண் அறக்கட்டளை கவனம் செலுத்தி வருகிறது. அங்கு நிறைவுபெறாமல் இருக்கும் கோவில் கட்டுமானத்தை நிறைவுசெய்வது, 15 ஆண்டுகள் பழமையான சென்னை மாநகராட்சி உடற்பயிற்சி மையத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.5 லட்சம் செலவில் தேவையான உபகரணங்களை வாங்கிக்கொடுப்பது போன்ற பணிகளை வருண் அறக்கட்டளை மேற்கொள்கிறது.

எதிர்கால வளர்ச்சிக்கு திட்டம்

இந்த உடற்பயிற்சி மையத்துக்கு அருகிலேயே சிறுவர்கள் பயன்பெறும் வகையில் கைப்பந்து மைதானமும் அமைக்கப்படுகிறது. ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தேவையான கரும்பலகைகள், மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மற்றும் இதர உபகரணங்கள் அறக்கட்டளை சார்பாக ரூ.2 லட்சம் செலவில் வாங்கித் தரப்படுகிறது.

இந்த அறக்கட்டளை தொடக்க விழாவில் பேசிய நிர்வாக இயக்குனர் வருண் மணியன், ‘இந்த அமைப்பின் நோக்கம் வாடும் மக்களின் வாழக்கையை மேம்படுத்துவது மற்றும் அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்குவதே ஆகும். அவர்களின் மேம்பாட்டுக்கு விளையாட்டை ஒரு கருவியாக நாங்கள் பயன்படுத்துகிறோம். சமூகத்தின் முன்னேற்றத்துக்கான முதன்மை படிகளில் விளையாட்டை ஒரு படியாக எடுத்துள்ளோம். சமூக வளர்ச்சி மற்றும் அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு நாங்கள் பெரிய திட்டத்தை வகுத்துள்ளோம்’ என்றார்.

வருண் அறக்கட்டளை மூலம் பயன்பெற விரும்புபவர்கள் 044-43470970 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்