மருத்துவ படிப்பில் சேருவதற்கான அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின தேர்வுக்குழு தகவல்

மருத்துவ படிப்பில் சேருவதற்கான அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பிவிட்டதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

Update: 2019-07-13 23:00 GMT
சென்னை, 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி தொடங்கியது.

அன்றைய நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. மொத்தம் 123 பேர் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதில், 81 பேர் கலந்து கொண்டு 46 எம்.பி.பி.எஸ்., 2 பி.டி.எஸ். இடங்களை தேர்வு செய்தனர். கடந்த 9-ந் தேதி முதல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. அன்றைய தினம் 1,013 பேர் அழைக்கப்பட்டதில் 977 பேர் மருத்துவ படிப்புகளை தேர்வு செய்தனர்.

அதேபோல், கடந்த 10-ந் தேதி 1,490 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதில், 1,379 பேரும், 11-ந்தேதி 1,981 பேர் அழைக்கப்பட்டதில், 1,041 பேரும் இடங்களை தேர்வு செய்தனர். நேற்றுமுன்தினம் பிற்பகலில் இருந்து சமுதாய பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. அன்றைய தினம் 2 ஆயிரத்து 176 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 622 பேர் கலந்தாய்வில் பங்கு பெற்று, 334 பேருக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் கிடைத்தன.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின

நேற்று எஸ்.சி., எஸ்.சி(ஏ), எஸ்.டி. பிரிவு மாணவர்களுக் கான கலந்தாய்வு நடந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 633 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 508 மாணவ-மாணவிகள் எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை தேர்வு செய்தனர்.

மொத்தத்தில் பொதுப்பிரிவினருக்கு கடந்த 5 நாட்களாக நடந்து முடிந்த கலந்தாய்வில் 23 அரசு கல்லூரிகள், ராஜா முத்தையா, இ.எஸ்.ஐ., 13 சுயநிதி கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 968 எம்.பி.பி.எஸ். அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பிவிட்டதாக தேர்வுக்குழுவினர் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

ஐ.ஆர்.டி. பெருந்துறை, வேலூர் சி.எம்.சி. கல்லூரிகளுக்கு இன்று (ஞாயிற்றுக் கிழமை) கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதனைத்தொடர்ந்து நாளையும்(திங்கட்கிழமை), நாளை மறுதினமும்(செவ்வாய்க்கிழமை) சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக் கான கலந்தாய்வு நடக்கிறது.

மேலும் செய்திகள்