தமிழகத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 64 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு

தமிழகத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 64 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Update: 2019-07-13 22:30 GMT
சென்னை, 

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சமரசத்துக்கு உட்பட்ட வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி லோக் அதாலத் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. லோக் அதாலத்தில், திருமண பிரச்சினை, தொழிலாளர் தகராறு, செக் மோசடி, வங்கி கடன், மோட்டார் வாகன விபத்து உள்பட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் சம்மதத்துடன் சுமுக முடிவு எடுக்கப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. இதற்காக ஒரு நீதிபதி மற்றும் 2 உறுப்பினர்கள் கொண்ட அமர்வை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உருவாக்குகிறது. இதுபோன்ற லோக் அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

அமர்வுகள்

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.கோவிந்தராஜ், ஆர்.சுரேஷ்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், பி.தங்கவேல், மலை சுப்பிரமணியன், கே.ஞானபிரகாஷம் மற்றும் ஜே.ஏ.கே.சம்பத்குமார் ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி செல்வக்குமார், செயலாளர் நீதிபதி ஜெயந்தி தலைமையிலான குழு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் 3 உதவி மேஜைகளை அமைத்திருந்தனர். அங்கு, லோக் அதாலத்தில் பங்கேற்று வழக்குகளுக்கு தீர்வு காண விரும்பிய மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் எந்தெந்த அமர்வுகளுக்கு செல்லவேண்டும் என்பது தொடர்பாக குறைவான ஒலி உடைய ‘மைக்’ மூலம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.

ரூ.93 லட்சம் இழப்பீடு

லோக் அதாலத்துக்கு வருபவர்களுக்கு உதவி செய்வதற்காக சட்டக்கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும் தன்னார்வத்தோடு ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. சிறப்பான ஏற்பாடுகளை செய்ததாகவும், சம்பந்தப்பட்ட அமர்வுகளுக்கு செல்வதற்கு வழிகாட்டியாக இருந்ததாகவும் கூறி லோக் அதாலத்துக்கு வந்தவர்கள், நீதிபதி ஜெயந்திக்கு நன்றி தெரிவித்துச் சென்றனர்.

சிறு காரண வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்த அமர்வில், 2016-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் ஒரு காலை இழந்த தென்னரசு என்பவருக்கு ரூ.93 லட்சம் இழப்பீட்டை தனியார் இன்சூரன்சு கம்பெனி கொடுத்து, அந்த வழக்கை முடித்துக்கொண்டது. தென்னரசு தமிழக அரசின் விவசாயத்துறையில் டிரைவராக வேலை செய்து வந்தார். தென்னரசு சார்பில் வக்கீல் பொன்னேரி கோவிந்தராஜ் ஆஜரானார்.

தமிழகம் முழுவதும் 467 அமர்வுகளில் நடந்த லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 63 ஆயிரத்து 869 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் வழக்காடிகளுக்கு ரூ.394 கோடியே 7 லட்சத்து 40 ஆயிரத்து 853 கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்