அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் தண்டனை வழங்க சட்ட திருத்தம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2019-07-17 23:30 GMT
சென்னை,

சட்டசபையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார். பின்னர், துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

இடி, மின்னல் பற்றிய குறும்படம்

தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களின் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு பற்றிய இணையதளம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். வறட்சி மேலாண்மை குறித்து விவசாயிகள் மற்றும் களப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்த ரூ.32 லட்சம் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். இடி, மின்னல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்திட ரூ.10 லட்சம் செலவில் குறும்படங்கள் தயாரிக்கப்படும்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் செருகளத்தூர் கிராமத்தில் மரப்பூங்கா சுமார் 40 ஆயிரம் பூர்வீக வன இனங்கள் மூலிகை செடிகளுடன் ரூ.5 கோடி செலவில் வனத்துறையின் மூலம் கஜா புயல் மறு கட்டமைப்பு, மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.

இணையவழி புவிசார் தரவுகள்

இணையவழி தரவுதளத்தில் 100 சதவீதம் நில உரிமை கொண்டுவரப்படாத நிலை உள்ளதால் நில உரிமை குறித்த தரவுகளை மேம்படுத்துவதற்காக ரூ.1 கோடி செலவில் ஒரு மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இணையவழி பட்டா மாறுதல் செய்யும் முறைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் கணினி மயமாக்கப்பட்ட நில ஆவணங்கள், சென்னை பெருங்குடியில் உள்ள மாநில தரவு மையத்தில் இருந்து இணையவழியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடும் வகையில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு மையத்தில் ரூ.52.37 லட்சம் செலவில் பேரிடர் மீட்பு அமைப்பு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

பேரிடர் அபாய மேலாண்மையினை திறம்பட மேற்கொள்ள, மூன்றடுக்கு இணையவழி புவிசார் தகவல்கள் அடிப்படையில் செயல்படும் டி.என்.ஸ்மார்ட் எனும் முடிவு ஆதார அமைப்பினை செயல்படுத்தியது. வறட்சி தொடர்பான அளவீடுகளை பன்முகப் பார்வையில் கண்காணிக்க, மழையளவு, சம்பா மற்றும் குறுவை பருவ காலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பல்வேறு பயிர்கள், அணைகளின் நீர் இருப்பு, நிலத்தடி நீர்மட்டம் போன்ற தரவுகள் இத்திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

கடும் தண்டனை

மரம் நடுதல் மற்றும் பலத்த காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்றிட முதல் நிலை மீட்பாளர்களாக மாணவர் சிறப்பு படை உருவாக்கப்படும். அதற்கான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். 114 வயதுடைய நில ஆக்கிரமிப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அரசு முடிவு செய்து பொருத்தமான திருத்தங்களை பரிந்துரைக்க, ஒரு செயலர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கான திருத்தங்கள் நடப்பு ஆண்டிலேயே இயற்றப்பட உள்ளன.

இந்த திருத்த சட்டத்தில், அரசு நிலங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிகள் கொண்டுவரப்பட உள்ளன. 9,633 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்