ஓட்டல் தொழிலில் சாதனை படைத்தவர் - ராஜகோபால்

மரணம் அடைந்த ‘சரவணபவன்’ ராஜகோபால் ஓட்டல் தொழிலில் சாதனை படைத்தவர்.

Update: 2019-07-18 23:45 GMT
சென்னை,

சாமானியனும் கடின உழைப்பால் புகழின் உச்சியை அடையலாம் என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டாக விளங்கியவர், ராஜகோபால். தொடக்கத்தில் சாதாரண மளிகை கடை நடத்திவந்த ராஜகோபால், சென்னை கே.கே.நகரில் உள்ள தனது வீட்டின் மாடியில் சிறியதாக ‘சரவணபவன்’ என்ற ஓட்டலை தொடங்கினார்.

ஓட்டலில் பரிமாறப்படும் உணவின் சுவை பிடித்து போகவே, நாளடைவில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதுவே நாளடைவில் வெளிநாடு களிலும் ஓட்டலின் கிளைகள் உருவாக அடித்தளமாக அமைந்தது.

தொழில் ஒருபுறம் என்றால், ஆன்மிகம் ஒருபுறம். தீவிர முருக பக்தரான இவர், கிருபானந்த வாரியாரின் சிஷ்யர் ஆவார். தனது சொந்த ஊரிலேயே வனதிருப்பதி கோவிலை கட்டி வழிபட்டார். பெற்றோர் மீதான அளவு கடந்த பாசம் காரணமாக அந்த கோவில் அருகிலேயே தனது தாய்-தந்தைக்கு சிலை வைத்தார்.

பெரும் புகழுடன் விளங்கிய ராஜகோபால் வாழ்க்கையில் விதி விளையாடியது. 2 மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அவர், தனது ஓட்டல் ஊழியர் மகளான ஜீவஜோதியை திருமணம் செய்ய விரும்பினார். இதற்காக ஜீவஜோதியிடம் இருந்து அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை பிரிக்கும் முயற்சியில் ராஜகோபால் தீவிரமாக இறங்கினார். ‘எவ்வளவு பணம் கொடுக்கவும் தயார், ஆனால் மனைவியை விட்டுத்தர வேண்டும்’, என்று தனது ஆதரவாளர்கள் மூலம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்.

இதற்கு பிரின்ஸ் சாந்தகுமார் உடன்பட மறுக்கவே, 2001-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி அவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பிரின்ஸ் சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதி கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 வழக்குகளில் ராஜகோபால் வேளச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 10 ஆண்டு தண்டனையை, ஆயுள் தண்டனையாக உயர்த்தி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. மேலும் ஜூலை 8-ந் தேதிக்குள் சரணடையவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உடல்நிலையை சுட்டிக்காட்டி ராஜகோபால் சார்பில், சரணடைய கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு ராஜகோபால் உடனடியாக சரணடைய அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த 9-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள செசன்சு கோர்ட்டில் ஆம்புலன்சு வேனில் படுத்த நிலையில் ராஜகோபால் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. முன்னதாக அவரை போலீசார் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை தேவை என்று அறிவுறுத்தியதை தொடர்ந்து, சிறை அதிகாரிகள் பாதுகாப்பில் அங்கேயே அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் ராஜகோபாலின் உறவினர்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதனைத்தொடர்ந்து அவர் கடந்த 16-ந் தேதி இரவு சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை ராஜகோபால் மரணம் அடைந்தார்.

2001-ம் ஆண்டு வழக்கில் சிக்கிய ராஜகோபால், வழக்கின் தீர்ப்புகள் காரணமாகவும், மன உளைச்சல் காரணமாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவர் மீதான 18 ஆண்டு கால வழக்கின் தீர்ப்பும், தண்டனையும் அவரது மரணத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

‘அண்ணாச்சி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ராஜகோபால், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள புன்னைநகர் எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரது முதல் மனைவி பெயர் வள்ளியம்மாள். 2-வது மனைவி பெயர் கிருத்திகா. ஷிவகுமார், சரவணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். 1981-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, சென்னை கே.கே.நகரில் ‘சரவணபவன்’ எனும் பெயரில் சிறிய ஓட்டலை தொடங்கினார். பின்னர் தனது கடும் உழைப்பால் படிப்படியாக வளர்ச்சி அடைந்தார்.

அதுவரை ஓட்டல்களில் வெறும் தட்டில் சாப்பாடு பரிமாறப்பட்டு வந்தநிலையில், தனது ஓட்டலில் தட்டில் வாழை இலை வைத்து சாப்பாடு பரிமாற செய்தார். இது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது. சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என அனைத்தும் வீட்டு சாப்பாடு சுவையில் கிடைத்ததால், ‘சரவணபவன்’ ஓட்டலுக்கு தனி மவுசு ஏற்பட்டது. சைவ உணவு ஓட்டல் என்றாலே ‘சரவணபவன்’ என்று மக்கள் மனதில் பதியவைத்து சாதனை படைத்தார்.

‘சரவணபவன்’ உணவகத்துக்கு சென்னையில் 25 கிளைகளும், காஞ்சீபுரம் மற்றும் டெல்லியில் தலா 2 கிளைகளும், வேலூர் மற்றும் திருச்செந்தூரில் தலா ஒரு கிளையும் என மொத்தம் 31 கிளைகள் உள்ளன.

இதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், பக்ரைன், குவைத், தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவீடன், கனடா, அயர்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் ‘சரவணபவன்’ ஓட்டல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிடம், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், ராஜகோபால். ‘நீங்கள் 3-வது திருமணம் செய்தால் மேலும் உச்சத்துக்கு செல்வீர்கள்’, என்று ஜோதிடர் ஒருவர் கூறிய ஆலோசனைதான், அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது. உழைப்பால் உயர்ந்து உச்சத்துக்கு சென்ற ராஜகோபாலின் கடைசி 18 ஆண்டுகள் அவரது நிம்மதியை குலைக்கும் வகையில் அமைந்துவிட்டது. ராஜகோபால், இறுதியில் ஆயுள் கைதியாகவே மரணம் அடைந்துவிட்டார்.

மேலும் செய்திகள்