வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-07-22 15:01 GMT

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்த பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்து வரும் 2 நாட்களுக்கு தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இடைவெளி விட்டு சில முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்