கடத்தப்பட்ட சிறுமி 8 மணி நேரத்தில் மீட்பு: சென்னை பாதுகாப்பான நகரம் என்பது நிரூபணமாகியுள்ளது போலீஸ் கமிஷனர் பெருமிதம்

கடத்தப்பட்ட சிறுமி 8 மணி நேரத்தில் சென்னையில் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை பாதுகாப்பான நகரம் என்பது நிரூபணமாகியுள்ளது என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2019-07-22 23:00 GMT
சென்னை,

சென்னை அமைந்தகரையில் கடந்த 17-ந்தேதி அன்று கடத்தப்பட்ட அன்விகா என்ற 4 வயது சிறுமியை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். கடத்திய குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

இதையொட்டி, சிறுமி அன்மிகாவின் தந்தை அருள் ராஜூம், தாயார் நந்தினியும் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனையும், குழந்தையை பத்திரமாக மீட்ட தனிப்படை போலீசாரையும் பாராட்டி பூங்கொத்து வழங்கினார்கள்.

அந்த நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசும்போது கூறியதாவது:-

சிறுமி அன்விகா மீட்கப்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்ச்சியையொட்டி நாம் இங்கு கூடியிருக்கிறோம். சென்னை மாநகர போலீசார் ஒருங்கிணைந்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதன் மூலம் சிறுமி அன்விகா பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார். கடத்தப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சிவப்பு நிற கார் ஒன்று பதிவாகியிருந்தது. அந்த சிவப்பு நிற காரை வைத்துத்தான் போலீசார் துப்புதுலக்கி குழந்தையை மீட்டுள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட தனிப்படை போலீசாரை நான் பாராட்டுகிறேன். மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் இன்று நேரடியாக வந்து நன்றி தெரிவித்து பாராட்டியது நாம் அனைவரையும் மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது.

சென்னை நகரம் பாதுகாப்பான நகரம் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம் ஏன் பாதுகாப்பான நகரம் என்று சொல்கிறோம் என்பது இந்த சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர்கள் முத்துசாமி, திருநாவுக்கரசு, டாக்டர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்