தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது - கே.எஸ்.அழகிரி

தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என 12ம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-26 13:36 GMT
சென்னை,

தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆங்கில பாடப்புத்தகத்தில் தொன்மையான மொழிகள் உருவான ஆண்டுகள் குறித்து கலிஃபோர்னியா பல்கலைக்கழக தமிழ் பேராசிரியரான ஜார்ஜ் எல்.ஹெர்ட் என்பவர் எழுதிய பாடம் இடம் பெற்றுள்ளது.

அதில் தமிழ் கி.மு. 300 ஆண்டில் உருவானதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரம் சீன மொழி கி.மு. 1250 ஆண்டிலும், சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டிலும், கிரேக்கம் கி.மு.1500 ஆண் ஆண்டிலும் உருவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழி உருவாகி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகி உள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். இதேபோல் தமிழின் புகழ் பெற்ற இலக்கியமான தொல்காப்பியம் உருவாகி 2500 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் சூழலில் தமிழ் மொழியை எப்படி புதிய பாடத்திட்டத்தில் வெறும் 2 ஆயிரத்து 300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று தமிழ்ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்மொழி குறித்து பாடப்புத்தகத்தில் வெளியான தவறாக கருத்துக்கு தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறுகையில், 

12-ம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.  தமிழர்களின் கலாச்சார, பண்பாட்டுப் பெருமையை சிறுமைப்படுத்துகிற வகையில் தமிழ் மொழியின் தொன்மை குறித்து குறிப்பிட்டுள்ளதை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்