சேலம் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பீதி

சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டதாக பீதி பரவியது.

Update: 2019-07-27 21:15 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். நேற்று காலை 8.45 மணிக்கு ஓமலூர், காமலாபுரம், சர்க்கரை செட்டிப்பட்டி, பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி, காடையாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டது.

இதைத்தொடர்ந்து சில நொடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாக பீதி பரவியது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் எந்த வீட்டிலும் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை. ஓமலூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் காட்டுத்தீ போன்று பரவியது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதிகாரிகள் பேட்டி

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காலை நேரத்தில் திடீரென்று பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. ஒரு சில நொடிகள் வீடுகள் குலுங்குவது போன்று இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து நாங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம். சில வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு விழுந்துள்ளன. இதன் காரணமாக எங்கள் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக எங்களுக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நிலநடுக்கத்தை அளவிடும் கருவியான சீமோஸ் கிராபி கருவியில் நில அதிர்வு எதுவும் பதிவாக வில்லை. இதனால் இது வதந்தியாக கூட இருக்கலாம் என்றனர்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பிய தருவாயில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல தற்போது ஓமலூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்