‘அரசியலில் எனக்கு விளம்பரம் அவசியம் இல்லை’ மு.க.ஸ்டாலின் பேட்டி

‘கடந்த 40 ஆண்டு அரசியலில் எனக்கு விளம்பரம் அவசியம் இல்லை’ என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2019-08-12 22:30 GMT
சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை 2 நாட்களாக சந்தித்து, நிவாரண உதவிகள் வழங்கிவிட்டு நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: நீங்கள் நீலகிரி சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தது விளம்பரத்திற்காகத் தான் என்ற வார்த்தையை முதல்-அமைச்சர் சொல்லியிருக்கின்றார்? அதைப்பற்றி தங்களின் கருத்து?

பதில்: அவர் அமெரிக்கா செல்லப்போகின்றார் என்ற செய்தி வந்தது. அது சீன் போடுவதற்காகவும், விளம்பரத்திற்காகவும் தான் போகப்போகின்றாரா? என்று திருப்பிக் கேட்டு, அவரைப் போன்று நாகரீகம் குறைந்து போவதற்கு நான் விரும்பவில்லை. எனக்கு விளம்பரம் தேடவேண்டிய அவசியமும் இல்லை. கடந்த 40 வருடமாக சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகரத்தின் மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக, மேலும், இன்றைக்கு தி.மு.க. தலைவராகவும் இருக்கின்றேன். எனக்கு விளம்பரம் அவசியம் இல்லை என்பது தான் முக்கியம். நீலகிரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட நான்கைந்து நாட்களாக கனமழை பெய்து, கூடலூர் சட்டமன்றத் தொகுதியே காணாமல் போய் இருக்கக்கூடிய சூழ்நிலையில், இன்றைக்கு ஒரு பேரழிவு பேராபத்து ஏற்பட்டிருக்கின்றது. இதுவரைக்கும், முதல்-அமைச்சர் சென்று பார்க்கவில்லை. அதற்கு துப்பில்லை. விமர்சனம் செய்வதற்கு யோக்கிதை வந்திருக்கின்றது அவருக்கு, பாராட்டுகின்றேன் அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்