நிராகரித்ததற்கு காரணம் கேட்டு ‘நீட்’ தேர்வு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது: ஐகோர்ட்டில், அட்வகேட் ஜெனரல் வாதம்

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாக்களை நிராகரித்ததற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு 11 கடிதங்கள் அனுப்பி உள்ளதாக ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

Update: 2019-08-13 23:31 GMT
சென்னை, 

மருத்துவ படிப்புக்காக நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து, தமிழக சட்டசபையில் 2 சட்ட மசோதாக்கள் கடந்த 2017-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டன. பின்னர், இந்த மசோதாக்கள் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட 4 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த இரு சட்ட மசோதாக்களை கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே நிராகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், 2017-ம் ஆண்டு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை பொதுமக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், ‘எந்த காரணமும் இன்றி இந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், அதன் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே, தகுந்த உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘இந்த ‘நீட்’ தேர்வு மசோதாக்கள் தொடர்பாக சட்டசபையில் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதுகுறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கக்கோரி கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி முதல் கடந்த மே 5-ந் தேதி வரை 11 கடிதங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி உள்ளது’ என்று கூறினார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்