மேட்டூர் அணை நீர்மட்டம் 108 அடியை தாண்டியது

கர்நாடகம், கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பின. இதனால் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2½ லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

Update: 2019-08-14 23:37 GMT
மேட்டூர், 

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி தெரியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தொங்கு பாலம் உடைந்து சேதமடைந்தது. காவிரி கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனினும் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. மேலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால், ஐந்தருவி பகுதிகளில் பாறைகள் சற்று வெளியே தெரிய தொடங்கின. மேலும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பை கழிவுகள், மரங்கள் ஆங்காங்கே சிக்கி கிடந்ததை காணமுடிந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. கடந்த ஒரு வார காலத்துக்குள் நீர்மட்டம் 54 அடியில் இருந்து 100 அடியை தாண்டியது. இதன் காரணமாக காவிரி டெல்டா பாசனத்துக்காக நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 10 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேலும் அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதன்படி வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே வந்தது. எனினும் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட, வரத்து அதிகமாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதன்படி நேற்று முன்தினம் 105.64 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 108.40 அடியாக உயர்ந்து இருந்தது. இதனால் 16 கண் பாலம் பகுதி நீர்நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விரைவில் மேட்டூர் அணை நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்