சென்னையில் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கம் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

சென்னையில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டி 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது.

Update: 2019-08-15 22:00 GMT
சென்னை, 

சென்னையில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டி 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது. அதில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பழமையான ரெயில் என்ஜின்

சென்னையில் சுதந்திர தின விழாவையொட்டி 164 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பழமையான நீராவி என்ஜின் ரெயில் (ஈ.ஐ.ஆர்-21) சென்னை எழும்பூர்-கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டது. இதனை தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நீராவி என்ஜினுடன் ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட்டது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் காலை 11.45 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில் 15 நிமிட பயணத்துக்கு பிறகு கோடம்பாக்கம் சென்றடைந்தது. இந்த நீராவி என்ஜின் ரெயில் கடந்த 1855-ம் ஆண்டு தனது சேவையை தொடங்கி 1909-ம் ஆண்டு சேவையை நிறுத்திக்கொண்டது.

பயணிகள் ஏமாற்றம்

அதன்பிறகு இந்த நீராவி என்ஜின் ரெயில், கண்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்த ரெயிலை தெற்கு ரெயில்வே, பொதுமக்கள் பார்வைக்காக இயக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு நீராவி என்ஜின் ரெயிலை மீண்டும் இயக்கும் வண்ணம், புதுப்பித்து தமிழகத்தில் பல பகுதிகளில் பொதுமக்கள் பார்வைக்காக இயக்கப்பட்டது.சென்னையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில், 9 முறை சென்னை சென்டிரல்-ஆவடி, பெரம்பூர் மற்றும் எழும்பூர்-கிண்டி, கோடம்பாக்கம் இடையே இந்த பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்ட போது பயணிகள் முன்பதிவு செய்து இதில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் நேற்று பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதிலும் அனைவரும் இந்த ரெயிலை பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் பி.மகேஷ் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்