பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: தமிழகம் முழுவதும் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-25 00:00 GMT
சென்னை,

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் வைத்து பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடற்கரைகள் உள்பட நீர்நிலைகளில் போலீசார் அனுமதி வழங்கும் நாட்களில் கரைக்கப்படும்.

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவும் வருகிற 29-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை, வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கும் அதிர்ச்சி தகவல் மத்திய உளவுத்துறைக்கு கிடைத்தது.

இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை சார்பில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதிக்கு ‘இ-மெயில்’ மூலம் அவசர கடிதம் கடந்த 22-ந்தேதி அனுப்பப்பட்டது.

உளவுத்துறை எழுதிய கடிதத்தில், “இலங்கையில் இருந்து ‘லஷ்கர்-இ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர். தற்போது கோவையில் பதுங்கி உள்ளனர். இந்துக்களை போன்று நெற்றியில் விபூதி பூசியும், திலகமிட்டும் மாறுவேடத்தில் வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். விமானநிலையங்கள், ரெயில் மற்றும் பஸ்நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்கள் போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாவட்டத்தின் நுழைவுவாயில்கள், முக்கிய சந்திப்புகள் ஆகியவற்றில் இரவு-பகலாக வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் நடமாட்டத்தையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் மாறுவேடங்களிலும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் வேளாங் கண்ணி மாதா கோவில், நீலகிரி மாவட்டம் ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையம், கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளம், கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் ஆகிய 4 இடங்களிலும், விநாயகர் ஊர்வலத்திலும் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளனர் என்று மத்திய உளவுப்பிரிவு போலீசார் தகவல் வெளியாகி உள்ளது.

எனவே இதையொட்டி பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் கைப்பைகள், உடமைகள் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் மாதா கோவில் உள்பட கிறிஸ்தவ தேவாலயங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஊர்வலம், வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

எனவே அந்த விழாக்கள் முடிவடையும் வரையில் தமிழகத்தில் தொடர்ந்து ரோந்து பணி மற்றும் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலில் நேற்று 2-வது நாளாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பக்தர்கள் கொண்டு வந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதித்தனர். நேற்று பெரிய கோவிலில் வழக்கத்தை விட கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஆங்காங்கே சாதாரண உடை அணிந்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் வேளாங்கண்ணி பேராலய திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளும், யாத்ரீகர்களும் வருவார்கள்.

இதனால் இங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் ஏராளமான போலீசார் ஆயுதம் ஏந்தியபடி கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து பேராலயத்தின் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னரே பேராலயத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் போலீசார் சோதனை செய்தனர். நெல்லையப்பர் கோவிலில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். பலத்த சோதனைக்கு பின்னர் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திலும், கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நேற்று பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர்.

ஈரோடு மாவட்டத்தில் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பாலாற்றின் அருகே பாலத்தில் பர்கூர் போலீசார் மற்றும் வனத்துறையினரும், பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு சோதனை சாவடி, செல்லாம்பாளையம் போலீஸ் சோதனை சாவடியிலும் வாகன சோதனை நடந்தது.

மேலும் செய்திகள்