விதவையிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், துணை தாசில்தார் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை

விதவையிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

Update: 2019-08-30 20:04 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாபுபாஷா. இவருடைய மனைவி கமருன்னிஷா(வயது 40). மாபுபாஷா இறந்து விட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கமருன்னிஷா நர்சாக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கமருன்னிஷா தனது மகனுக்கு வாரிசு, சாதி, இருப்பிடம் ஆகிய சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிப்பதற்காக ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.

ரூ.14 ஆயிரம் லஞ்சம்

அப்போது அங்கிருந்த தற்காலிக ஊழியர் உத்திரவன்னியனிடம் சான்றிதழ்கள் பெறுவதற்காக விண்ணப்பத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்று கமருன்னிஷா கேட்டுள்ளார். உடனே அவர், கமருன்னிஷாவை தாசில்தார் அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்த தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் அருள்பிரகாசம் ஆகியோர் சான்றிதழ்கள் தரவேண்டுமானால் லஞ்சமாக ரூ.14 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கமருன்னிஷா, வீட்டிற்கு சென்று பணத்தை ஏற்பாடு செய்து வேறொருநாள் வந்து தருவதாக கூறிவிட்டு சென்றார்.

ரசாயனம் தடவிய பணம்

பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத கமருன்னிஷா, இதுபற்றி கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து ரசாயன பொடி தடவிய ரூ.14 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கமருன்னிஷாவிடம் போலீசார் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர், போலீசாரின் அறிவுரைப்படி நேற்று மாலை 4 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.

அவருடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்து தாலுகா அலுவலகத்தில் பதுங்கி இருந்தனர். அங்கிருந்த உத்திரவன்னியனை சந்தித்த கமருன்னிஷா, பணம் கொண்டு வந்திருப்பதாக கூறினார்.

தாசில்தார், துணை தாசில்தார் கைது

இதையடுத்து அவர், கமருன்னிஷாவை தாசில்தார் அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்த தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் அருள் பிரகாசம் ஆகியோரிடம் கமருன்னிஷா ரூ.14 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது தாலுகா அலுவலகத்தில் பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த அறைக்கு விரைந்து சென்று தாசில்தார், துணை தாசில்தார், தற்காலிக ஊழியர் ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து, கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்