சுங்க கட்டணம் உயர்வுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-09-04 23:29 GMT
சென்னை,

தாம்பரம்-திண்டிவனம் இடையிலான 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு 2005-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இச்சாலை சுங்க கட்டண சாலையாக அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டுமே செலவானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுங்கச்சாலை அமைக்கப்பட்டது முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரையிலான 13 ஆண்டுகள் சுங்கச்சாவடிகளில் ரூ.1,098 கோடி சுங்க கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

சாலை அமைக்க செலவிடப்பட்டதை விட இரு மடங்கிற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் முழு கட்டணம் வசூலிப்பது ஏன்?. சுங்க கட்டணம் ரத்து செய்யப்படுவதை தவிர்க்கவும், தொடர்ந்து வாகன உரிமையாளர்களை சுரண்டவும் வசதியாகவே திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. இது நியாயமல்ல.

தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அவற்றை அமைப்பதற்காக ஆன உண்மையான செலவு, இதுவரை உண்மையாக வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை கொண்ட ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்க கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடிகளில், பராமரிப்பு கட்டணமாக 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அறிகையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்