பள்ளிக்கரணையில் பரிதாபம் ‘பேனர்’ சரிந்து பெண் என்ஜினீயர் பலி சாலையில் விழுந்தவர் மீது தண்ணீர் லாரி ஏறியது

பள்ளிக்கரணையில், சாலையின் நடுவில் வைத்து இருந்த அ.தி.மு.க. ‘பேனர்’ சரிந்து விழுந்த தில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த பெண் என்ஜினீயர், தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

Update: 2019-09-12 22:00 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபாஸ்ரீ(வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்குடி கந்தன் சாவடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை பணி முடிந்து சுபாஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவிலும், ஓரமும் அ.தி.மு.க. ‘பேனர்’கள் வைத்து இருந்தனர்.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி

சாலையின் நடுவே இருந்த அ.தி.மு.க. ‘பேனர்’ ஒன்று திடீரென சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபாஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையில் விழுந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் கோவிலம்பாக்கம் நோக்கி வந்த தண்ணீர் லாரி சுபாஸ்ரீ மீது ஏறி இறங்கியது. தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய சுபாஸ்ரீ, அதே இடத்தில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் கைது

இதற்கிடையில், இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து போலீசாருக்கும், பள்ளிக்கரணை போலீசாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுமார் அரை மணிநேரமாக சுபாஸ்ரீயின் உடல் சாலையிலேயே கிடந்தது.

இதையடுத்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, பலியான சுபாஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தண்ணீர் லாரி டிரைவரான பீகாரை சேர்ந்த மனோஜ்(25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சாலையின் நடுவே ‘பேனர்’ கள் வைக்க எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதும் அவசர அவசரமாக சாலையின் நடுவே இருந்த ‘பேனர்’கள் அகற்றப்பட்டது.

போலீசில் புகார்

இதற்கிடையில், சம்பவ இடத்தில் அனுமதி இன்றி ‘பேனர்’ வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் ஜெய கோபால் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் பள்ளிக்கரணை போலீசில் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமல்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்