வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விதிப்பை எதிர்த்து இயக்குனர் ஷங்கர் வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி விதிப்பதை எதிர்த்து திரைப்பட இயக்குனர் ஷங்கர் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Update: 2019-09-12 22:15 GMT
சென்னை, 

ஜென்டில்மேன், இந்தியன் உள்பட ஏராளமான தமிழ் படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஷங்கர். இவர், சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2012-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இங்கிலாந்து நாட்டில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ சொகுசு காரை வாங்கினேன். இந்த கார் சென்னைக்கு கொண்டு வந்ததும், ரூ.1 கோடியே 72 லட்சத்து 61 ஆயிரம் சுங்கக்கட்டணமாக செலுத்தினேன். பின்னர், இந்த காரை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தேன்.

ஆனால், வட்டார போக்குவரத்து அலுவலர், காரை பதிவு செய்ய மறுத்துவிட்டார். அவர், ‘நுழைவு வரியை செலுத்திவிட்டு, வணிக வரித்துறை முதன்மை செயலாளரிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே, காருக்கு பதிவு எண் வழங்கி, அவற்றை பதிவு செய்ய முடியும் என்று கூறிவிட்டார்.

15 சதவீத வரி

ஆனால் கேரளா ஐகோர்ட்டு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டும் ஏற்று கடந்த 2000-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே, நுழைவு வரி மற்றும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல், என் காரை பதிவு செய்ய கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 2012-ம் ஆண்டு ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில், ‘இயக்குனர் ஷங்கரிடம் 15 சதவீத நுழைவு வரி கட்டணத்தை பெற்றுக் கொண்டு, அவரது காரை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலர் பதிவு செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டது.

வரி வருமானம்

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் வி.சண்முகசுந்தர், ‘மனுதாரர் காருக்கு நுழைவு வரி சுமார் ரூ.44 லட்சம் செலுத்த வேண்டும். ஐகோர்ட்டின் இடைக்கால உத்தரவின்படி, ரூ.6 லட்சத்துக்கு 60 ஆயிரத்து 175 செலுத்திவிட்டு காரை பதிவு செய்து கொண்டார்.

இதுபோல ஏராளமான வெளிநாட்டு சொகுசு கார்கள் முழு வரியையும் செலுத்தாமல், பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் கிடைக்கவில்லை’ என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று (வெள்ளிக் கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்