‘பேனர்’ சரிந்து விழுந்ததில் பெண் என்ஜினீயர் பலி: ஐகோர்ட்டு கடும் கண்டனம் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு

சென்னையில் ‘பேனர்’ சரிந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியானதை தொடர்ந்து, மெத்தன போக்குடன் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு, உங்களுக்கு இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பியது.

Update: 2019-09-14 00:15 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் நேற்று காலை வழக்குகளை விசாரிக்க தொடங்கினர்.

அப்போது வக்கீல்கள் கே.கண்ணதாசன், லட்சுமி நாராயணன் ஆகியோர் ஆஜராகி, சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்ததால் சுபஸ்ரீ என்ற பெண் என்ஜினீயர் நிலை தடுமாறி விழுந்து லாரியில் அடிபட்டு பலியான சம்பவத்தை நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “பொது இடங்களில் சட்டவிரோதமாக பேனர் களை வைக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு தடை விதித்து பல உத்தரவுகள் பிறப்பித்தும், பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி சாலையில் விழ, பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கி உள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பலியாகி உள்ளார். லாரி டிரைவர் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேனர் வைத்த ஆளும்கட்சி பிரமுகர் மீது மட்டும் தமிழ்நாடு பொதுச் சொத்து சேதம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்” என்றனர்.

அதற்கு நீதிபதிகள், “நாங்கள் ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்து விட்டோம். அதிகாரிகள் அதை அமல்படுத்துவது இல்லை. அரசியல் தலைவர்களுக்கு கீழ்ப்படிந்து அவர்கள் நடக்கின்றனர். அதிகாரிகள் ரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள் போல செயல்படுகின்றனர். சட்டவிரோத பேனர்களினால் யாராவது இறந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு கொடுத்துவிட்டு, இதேபோல அடுத்த சாவு நடக்கும் வரை அதிகாரிகள் காத்து இருக்கின்றனர். தலைமைச்செயலகத்தை அப்படியே தூக்கி வந்து ஐகோர்ட்டில் வைக்காதது மட்டுமே பாக்கி. மற்றபடி அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்து விட்டோம்” என்று கூறினார்கள்.

பின்னர், சட்டவிரோதமாக பேனர் வைக்கப்படுவது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர்.

எத்தனை லிட்டர் ரத்தம் தேவை?

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜராகி இருந்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.

“உங்கள் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் சாலைகள் மீது சிவப்பு வர்ணம் பூச இன்னும் எத்தனை லிட்டர் மனித ரத்தம் தேவை? இதுதான் குடிமக்களின் உயிரை காப்பாற்றும் அரசின் லட்சணமா? குடிமக்களின் உயிர் அவ்வளவு சாதாரணமாகி விட்டதா? சட்டவிரோத பேனர்கள் ஒரே நாள் இரவில் வந்து விடவில்லை. அதை தடுக்க அதிகாரிகள் ஏன் தீவிரம் காட்ட மறுக்கின்றனர்? காதுகுத்துவதற்கும், கிடா வெட்டுவதற்கும் பேனர்கள் வைக்கின்றனர்.

அரசியல் நிகழ்ச்சிக்கும் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கின்றனர். அமைச்சர்களுக்கு பேனர் வைத்தால் தான் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு போக வழி தெரியுமா? அப்போதுதான் நிகழ்ச்சிக்கு வருவார்களா? சட்டவிரோத பேனர்களால் இன்னமும் மக்களின் ரத்தம் சாலையில் வெள்ளமாக ஓடவேண்டுமா? அந்த பேனர் வைப்பதை தடுக்காத அதிகாரிகள் எப்படி தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்ப்பார்கள்? சாலையில் பொதுமக்கள் மத்தியில் எப்படி முகத்தை வைத்துக் கொண்டு நடந்து செல்வார்கள். இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு அரசு வழங்கினாலும், இறந்தவரின் உயிர் திரும்ப வந்து விடுமா? என்று நீதிபதிகள் கேட்டனர்.

அத்துடன், “கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து பெற்றோரை பார்க்க கோவை வந்திருந்த வாலிபர் இதேபோல் பேனர் விழுந்து பலியானார். இப்போது வெளிநாட்டுக்கு போக இருந்த இளம் பெண் இறந்து உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த ஆகஸ்டு மாதம் வரை 8 உத்தரவுகளை பிறப்பித்து உள்ளோம். ஆனால் ஒரு உத்தரவும் அமல்படுத்தப்படவில்லை. இந்தநிலை தமிழகத்தில்தான் உள்ளது. நாங்கள் (நீதிபதிகள்) அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம்” என்றும் நீதிபதிகள் கூறினர்.

அப்போது குறுக்கிட்ட அட்வகேட் ஜெனரல், “இந்த பிரச்சினைக்கு எப்படி தீர்வு காணலாம் என்பது குறித்து அடிக்கடி ஆலோசனை நடத்துகின்றனர்” என்றார்.

முதல்-அமைச்சர் அறிக்கை வெளியிட்டாரா?

உடனே நீதிபதிகள், “அதிகாரிகள் விதவிதமாக பிஸ்கெட்டுகளை சாப்பிட்டு டீ குடிக்க கூட்டத்தை நடத்துகின்றனர். இதனால் எந்த பயனும் இல்லை. சட்டவிரோதமாக பேனர்களை வைக்கக்கூடாது என்று தங்கள் கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்துங்கள் என்று அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்தோம். முதல்-அமைச்சர் இதுவரை அறிவிப்பு வெளியிட்டாரா? நீங்கள் (வக்கீல் கே.கண்ணதாசனை பார்த்து) தி.மு.க.வை சேர்ந்தவர்தானே. உங்கள் தலைவர் இதுவரை இதுபோன்ற அறிவிப்பு வெளியிட்டாரா?” என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு வக்கீல் கண்ணதாசன், “ஆமாம், ஏற்கனவே தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், இதுபோன்ற நிலையில் அரசியல் கட்சிகள்தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பதை தடுக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும் என்றும் கூறினார்கள்.

அப்போது குறுக்கிட்ட வக்கீல் லட்சுமிநாராயணன், “ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வக்கீலை நியமித்து சட்ட விரோத பேனர்கள் வைக்கப்படுவது குறித்து கண்காணிக்க உத்தரவிடலாம்” என்று யோசனை தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “வக்கீலாக பதிவு செய்யும் போது பார் கவுன்சில் முன்னால் ஏராளமான பேனர்கள் வைக்கப்படுகின்றன. அவர்கள் மீது பார் கவுன்சில் நிர்வாகிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

பின்னர், இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைப்பதாக கூறிய நீதிபதிகள், அப்போது, இந்த இளம்பெண் சாவுக்கு காரணமான போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டுக்கு விரைந்து வந்து, அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் தீவிர ஆலோசனை நடத்தினர்.

பின்னர், இந்த வழக்கு பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. பரங்கிமலை துணை போலீஸ் கமிஷனர் பிரபாகர், பள்ளிக்கரணை உதவி கமிஷனர் சவுரிநாதன், போக்குவரத்து புலன் விசாரணை இன்ஸ்பெக்டர், மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் உள்பட பல அதிகாரிகள் ஆஜராகினர். அப்போது நடந்த வாதம் வருமாறு:-

வக்கீல் கண்ணதாசன்: இந்த ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தவுடன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பேனர்கள் வைக்கக்கூடாது என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தி கடிதம் எழுதி உள்ளார். இனி பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறி உள்ளார்.

நீதிபதிகள்: நல்லது. மிகவும் நல்லது.

வக்கீல் லட்சுமிநாராயணன்:- ஐகோர்ட்டு உத்தரவின் படி தியாகராயநகரில் பேனரை அகற்றிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு பணி பாதுகாப்பு இல்லை. நேற்று கூட எந்த போலீஸ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற பிரச்சினையில், பலியான சுபஸ்ரீ உடல் 2 மணி நேரம் சாலையில் கிடந்து உள்ளது. பலியான பெண்ணின் தந்தையிடம் புகார் வாங்கியே வழக்குப்பதிவு செய்தனர்.

குற்றவாளிகளுக்கு சாதகமாக வழக்குப்பதிவு

நீதிபதிகள்:- விபத்து எப்போது நடந்தது? எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது?

பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர்:- மதியம் 2.30 மணிக்கு விபத்து நடந்தது. மாலை 6 மணிக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீதிபதிகள்:- அதுவரை உடல் சாலையில் கிடந்ததா? இதுபோன்ற விபத்து சம்பவத்தில் பொதுமக்கள் கூட புகார் கொடுக்கலாம். அப்படி இருக்கும் போது பெண்ணின் தந்தையை வரவழைத்து புகாரை பெற்றது ஏன்?

இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இன்ஸ்பெக்டரிடம் இருந்து வழக்கு ஆவணங்களை வாங்கி படித்துப் பார்த்தனர். பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-

முதல் தகவல் அறிக்கையில், பேனர்கள் விழுந்து பெண் பலியானதாக கூறி இருக்கிறீர்கள். பார்வை மகஜரில், பேனர் குறித்து ஒரு வார்த்தைக் கூட குறிப்பிடாதது ஏன்? இப்படி குற்றவாளிகளுக்கு சாதகமாக வழக்குப்பதிவு செய்வதால்தான், நீதிமன்றங்களால் குற்றவாளிகளை தண்டிக்க முடியவில்லை. இதனால் தீர்ப்பு வெளியானதும் பாதிக் கப்பட்டவர்கள் வேதனை அடைகின்றனர். குற்றவாளிகள் உள்பட அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கடந்த பிப்ரவரி 15-ந்தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறி இருந்தார். அதில், சட்டவிரோத பேனர்களை தடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இதன்படி எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன? உண்மையில் பார்க்கப்போனால், இந்த வழக்கில் தலைமைச் செயலாளர் மீதுதான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் பலமுறை எச்சரிக்கை செய்து உள்ளோம். ஆனால், அதிகாரிகள் அதை மதிப்பது இல்லை. அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போது யார் இழப்பீடு வழங்குவது?

நீதிபதிகள் இவ்வாறு கூறியதும், “தமிழக அரசு இழப்பீடு வழங்கும்” என்று அட்வகேட் ஜெரனல் கூறினார்.

உடனே நீதிபதிகள், இதை ஏற்க முடியாது என்றும், தமிழக அரசிடம் இருப்பது மக்களின் வரிப்பணம் என்றும், அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டதற்கு மக்களின் வரிப்பணம் எதற்கு வீணாக செலவு செய்யவேண்டும்? என்றும் கூறினார்கள். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

நீதிபதிகள் உத்தரவு அதன்பிறகு நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.
அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ, பெற்றோருக்கு ஒரே மகள். அதிகாரிகள் மெத்தனபோக்குடன் செயல்பட்டதால், அந்த இளம்பெண் பலியாகி உள்ளார். இது அந்த பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாது பெரும் இழப்பாகும். இருந்தாலும், அவரது பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சத்தை தமிழக அரசு வழங்கவேண்டும்.

இந்த தொகையை, தவறு செய்த, கடமையை செய்ய தவறிய, பணியில் மெத்தனமாக இருந்த மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து தமிழக அரசு பிடித்தம் செய்யவேண்டும்.

சுபஸ்ரீ பலியான சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசாரும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசாரும் தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளின் புலன் விசாரணை சென்னை போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் நடைபெறவேண்டும்.

சட்டவிரோத பேனர்களை தடுக்காத அதிகாரிகள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை அதிகாரிகள் வருகிற 25-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்