பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில்: அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க தனிப்படை

பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில், தலைமறைவான அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Update: 2019-09-14 23:15 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் சுபஸ்ரீ(வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 12-ந்தேதி பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பியபோது, பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைத்து இருந்த பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இதுபற்றி பரங்கிமலை போலீசார் பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் மனோஜை கைது செய்தனர். அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக ஜெயகோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் பேனர் அடித்து கொடுத்ததாக கோவிலம்பாக்கத்தில் உள்ள அச்சகத்துக்கும் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபாலிடம் விசாரணை நடத்த பள்ளிக்கரணை போலீசார் சென்றபோது அவர் வீட்டில் இல்லை என்று தெரியவந்தது. இதனால் தலைமறைவான ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் நெஞ்சுவலியால் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஜெயகோபால் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது. உடனே பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரித்தனர்.

ஆனால் அதுபோல் அவர் எந்த ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெறவில்லை என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் மருத்துவ பரிசோதனைக்கு வந்து சென்றாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ப லியான சுபஸ்ரீயின் தந்தை ரவி, அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தாய் கீதா, குரோம்பேட்டையில் புத்தக விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு சுபஸ்ரீ ஒரே மகள் ஆவார். மகளின் சாவு, அவரது பெற்றோரை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து முடித்த சுபஸ்ரீ, வெளிநாட்டு வேலைக்கு தேர்வெழுதி கனடாவுக்கு செல்ல இருந்தார். ஆனால் அவரது கனவு நிறைவேறாமல் போய்விட்டது.

பன்முகத்திறமை கொண்ட சுபஸ்ரீ, ‘ஜூம்பா’ நடனத்தில் கைதேர்ந்தவர் என்றும், கல்லூரியில் படிக்கும்போது, கல்லூரிகளில் நடைபெறும் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்வார். அதில் வெற்றி பெற்று அதிக பரிசுகளையும் அள்ளி விடுவார், அவரை செல்லமாக ‘ஜில்லு’ என்று அழைத்து வந்ததாகவும் அவரது வீட்டின் அருகே வசிப்பவர்கள், உடன் படித்த நண்பர்கள், உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சு பஸ்ரீ மறைவுக்கு சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். படிப்பில் கெட்டிக்காரியாக விளங்கிய சுபஸ்ரீயின், பல்வேறு ‘டிக் டாக்’ வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து சுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அவரது சாவுக்கு காரணமாக இருந்த பேனர்கள் வைக்க தடை செய்யவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்