சொகுசு கார்களுக்கு நுழைவு வரி: நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் தொடர்ந்த வழக்குகள் - ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சொகுசு கார்களுக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக நடிகர்கள் விஜய், தனுஷ் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Update: 2019-09-14 22:02 GMT
சென்னை,

சினிமா இயக்குனர் எஸ்.ஷங்கர், கடந்த 2012-ல் வெளிநாட்டில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரியாக சுமார் ரூ.44 லட்சம் செலுத்திவிட்டு, வணிக வரித்துறை முதன்மை ஆணையரிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே, பதிவு செய்ய முடியும் என்று கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலர் கூறினார்.

இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் ஷங்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 15 சதவீத நுழைவு வரியை செலுத்தி, காரை பதிவு செய்துகொள்ளலாம் என்று அதே ஆண்டில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதன்படி அவரது கார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் வி.சண்முகசுந்தர், ‘வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த பலர், நுழைவு வரி செலுத்தாமல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நுழைவு வரியில் 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை செலுத்தி சொகுசு காரை பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

இதில் ஒரு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்’ என்று கூறி தீர்ப்பு நகலை தாக்கல் செய்தனர்.

இயக்குனர் ஷங்கர் சார்பில் ஆஜரான சாய்குமரன், ‘இந்த டிவிசன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது’ என்றார்.

அதற்கு அரசு வக்கீல், ‘சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்து தொடர்பாக பல வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது’ என்று தெரிவித்தார். இதையடுத்து, நிலுவையில் உள்ள அந்த வழக்குகளை எல்லாம் நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இயக்குனர் ஷங்கரை போலவே, நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டும், நடிகர் தனுஷ் 2015-ம் ஆண்டும் சொகுசு கார்களை வாங்கி, அதற்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இடைக்கால உத்தரவுகளை பெற்றுள்ளனர்.

இவர்களது வழக்குகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் வழக்குகள் நாளை நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்