மின் பெட்டிகள் மீது சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி

மின் பெட்டிகள் மீது சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என தங்கமணி கூறினார்

Update: 2019-09-18 09:27 GMT
சென்னை

சென்னை சிட்லபாக்கம் மற்றும் முகலிவாக்கத்தில் நடந்த 2 மின் விபத்துகளுக்கும், மின்சார வாரியம் பொறுப்பல்ல என்று மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  சிட்லபாக்கம் சேதுராஜ் மறைவுக்கு சேதமடைந்த மின்கம்பம் தான் காரணம் என கூறுவதை மறுத்தார்.

சேதுராஜ் இறப்பதற்கு முன்பாக அந்த வழியாக சென்ற ஒரு கான்கிரீட் லாரி மின் கம்பத்தை சேதப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டு, அந்த மின் கம்பம் நல்ல நிலையில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரத்தையும் காண்பித்தார். அதேபோல் முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் மரணத்துக்கும் மின்வாரியத்திற்கும் தொடர்பில்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது 

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மின் வாரியம் தயார் நிலையில் உள்ளோம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.  மின் பெட்டிகள் மீது சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்