படத்தை விளம்பரம் செய்ய ஒரு சிலர் எதை எதையோ பேசுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

படத்தை விளம்பரம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் எதை எதையோ பேசுகின்றனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Update: 2019-09-22 16:01 GMT
தூத்துக்குடி,

கோவில்பட்டியில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்குவது பற்றி தலைமை தான் முடிவு செய்யும். தலைமை யாரை போட்டியிட வைத்தாலும் வெற்றி பெறுவோம்.  தமிழகத்தில் அதிமுக ஆளும் கட்சி, திமுக எதிர்க்கட்சி என 2 கட்சிகளை தான் மக்கள் அங்கீகரித்துள்ளனர்.

பல சினிமா நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர். ஆனால் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்து எந்த நடிகர்களும் வெற்றி பெற்றதாக தமிழகத்தில் வரலாறு கிடையாது.

அரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்ட கமல்ஹாசன் தற்போது வெளியேற தெரியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறார். கமல்ஹாசனின் திரைப்படம் வெளியாகும் போது அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையாவது தான் ஊழல்.

படத்தை விளம்பரம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் எதை எதையோ பேசுகின்றனர். பாகவதர் நடித்த ஹரிதாஸ் 3 தீபாவளிகளுக்கு ஓடியது, அந்த சாதனையை எந்த நடிகரும் முறியடிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்