‘பேனர்’ விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

‘பேனர்’ விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அரசிடம் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2019-09-24 00:00 GMT
சென்னை,

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ. இவர் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சட்டவிரோதமாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண ‘பேனர்’ சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதனால் நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது, பின்னால் வேகமாக வந்த லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 13-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்தபோது, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சாலையை சிவப்பு நிறமாக்க பொதுமக்களின் ரத்தம் இன்னும் எத்தனை லிட்டர் தேவை? என்றும் அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக வேலை செய்யும் அரசு அதிகாரிகள் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், இளைய தலைமுறை என்ற அமைப்பு, சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், “சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தோம். இதற்கு அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். ஆனால், அந்த மனுவை பரிசீலிக்காமலும், உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்காமலும் போலீஸ் அதிகாரிகள் இழுத்து அடிக்கின்றனர். எனவே, உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “சுபஸ்ரீ மரண சம்பவம் நடந்து 11 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளியை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. இதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்கேட்டும் அதை தர போலீசார் மறுக்கின்றனர்” என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் அய்யப்பராஜ், “ஏற்கனவே, இதுதொடர்பான வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது” என்றார்.

அதற்கு நீதிபதி, “டிவிசன் பெஞ்சில் நிலுவையில் இருந்தாலும், இந்த வழக்கை விசாரிக்க இந்த ஐகோர்ட்டுக்கு (எனக்கு) முழு அதிகாரம் உள்ளது. அதனால், இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும். மேலும், சுபஸ்ரீ வழக்கில் குற்றவாளியை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், “சட்டவிரோதமாக பேனர் வைத்ததை தடுக்காத, அதை உடனே அகற்றாத மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது ஏன் இதுவரை கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை?”. இதற்கு விரிவான பதிலை நாளை (புதன்கிழமை) மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்