கடன் தொல்லையால் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை 3 பேருக்கு தீவிர சிகிச்சை

திருமுல்லைவாயல் அருகே கடன் தொல்லை யால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் தாய் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2019-10-12 21:05 GMT
ஆவடி,

சென்னை ஆவடியை அடுத்த அன்னனூர் சிவசக்தி நகர் 24-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 65). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுப்பம்மாள் (60). இவர்களுக்கு நாகராஜ் (35) ரவி (30) ஆகிய 2 மகன்களும், கல்யாணி (28) என்ற மகளும் உள்ளனர். கல்யாணிக்கு திருமணமாகி அவரது கணவர் ஆறுமுகம் மற்றும் பெண் குழந்தைகளான சர்வேஸ்வரி (8), யோகபிரியா (6) ஆகியோருடன் அண்ணனூர் பகுதியில் தனியாக வசித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கல்யாணி தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து ஆறுமுகம் நேற்று இரவு 7 மணிக்கு மனைவி மற்றும் மகள்களை பார்ப்பதற்காக மாமனார் வீட்டிற்கு சென்றார்.

4 பேர் சாவு

அப்போது வீட்டுக்குள் மாமனார் கோவிந்தசாமி, மாமியார் சுப்பம்மாள், மைத்துனர்கள் நாகராஜ், ரவி, தனது மனைவி கல்யாணி, மற்றும் 2 குழந்தைகள் சர்வேஸ்வரி, யோகபிரியா ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டிற்குள் மயங்கி விழுந்து கிடந்தனர். இதை பார்த்து பதறிப்போன ஆறுமுகம் தனது மனைவி மற்றும் மகள்கள் இருவரையும் மீட்டு, ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து டாக்டர்கள் பார்த்து விட்டு அவர்கள் மூவரையும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உடனே இது குறித்து ஆறுமுகம் திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி, ஆகியோரை சோதித்து பார்த்தபோது, அவர்கள் 4 பேரும் வீட்டிற்குள் உயிரிழந்தது உறுதியானது.

கடன்

இதையடுத்து, இறந்து போன 4 பேரின் உடலையும் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்யாணி மற்றும் இரண்டு குழந்தைகளும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 15 ஆண்டுகளாக சொந்த வீட்டில் கோவிந்தசாமி குடும்பத்துடன் வசித்து வந்ததாகவும், தனது மகன்களான நாகராஜ் மற்றும் ரவி ஆகியோருக்கு திருமணம் ஆகிய நிலையில் அவர்களது மனைவிகள் இருவரும் பிரிந்து சென்று விட்டதால் குடும்பத்தினர் மன விரக்தியில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் கோவிந்தசாமி குடும்பத்தினர் ரூ.60 லட்சம் வரைக்கும் தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்ததாகவும், கடனை செலுத்த முடியாமல் குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

எனவே வீட்டை மீட்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததால் மனவிரக்தியில் இருந்த குடும்பத்தினர் பூச்சி மருந்து(விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அவர்கள் வீட்டிற்கு வந்த கோவிந்தசாமியின் மகள் கல்யாணியும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு தனது குழந்தைகளுக்கு கொடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்