கீழடியில் 10 சதவீதம் அளவுக்கே அகழாய்வு நடந்துள்ளது: தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேச்சு

கீழடியில் 10 சதவீதம் அளவுக்கே அகழாய்வு நடந்துள்ளது என தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் பேசினார்.

Update: 2019-10-14 23:15 GMT
மதுரை, 

மதுரை தமிழ்சங்கம் சாலையில் உள்ள செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசை கல்லூரியில் கீழடி தமிழர்களின் தொன்மை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வேணுகா வரவேற்று பேசினார்.

நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்ப முரளி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், வக்கீல் கனிமொழிமதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கீழடியின் பெருமைகள் பற்றி எழுத்தாளர் அமுதன் என்ற தனசேகரன் எழுதி ‘தினத்தந்தி’ பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ‘மண்மூடிய மகத்தான நாகரிகம்’ என்ற புத்தகம் உள்பட 5 புத்தகங்கள் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தன. அதன்படி அமுதன் என்ற தனசேகரன், பெருமாள் (கீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி), இளங்கோ (தமிழக தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை), காந்தியரசன் (கீழடி மதுரை ஓர் அறிமுகம்) ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் விருது பெற்றனர்.

இதே போல் மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுதிய வைகை நதி நாகரிகம் என்ற புத்தகத்துக்கும் விருது வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாவது:-

கீழடி அகழாய்வு பணிகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக உலக அளவில் தற்போது கீழடி பற்றி பேசப்பட்டு வருகிறது. தமிழ் மொழி, தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசார பெருமைகளை சங்க இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. ஆனால் அதற்கு சான்று இல்லாத நிலை இருந்து வந்தது.

இதுபோல், மிகவும் தொன்மையான நகரமாக அறியப்படும் மதுரை குறித்து வரலாற்று ரீதியாகவோ, தொல்லியல் ரீதியாகவோ சான்றுகள் ஏதும் இல்லாத நிலை இருக்கிறது. இதையெல்லாம் அறியும் முயற்சியாகவே கீழடி அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன.

முதல் 2 கட்டங்களாக நடந்த அகழாய்வுகளில் அங்கு கிடைக்கப்பெற்ற தொல்லியல் பொருட்கள் கி.மு. 300-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பதை தெளிவுபடுத்தியது. தற்போது 4-வது கட்ட அகழாய்வில் அங்கு கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகள் கி.மு. 583 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என உறுதிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட தமிழர்கள் குறித்த செய்திகள் அனைத்தும் கற்பனையே என்று கூறியவர்களின் கூற்றை, கீழடி அகழாய்வு பொய்யாக்கி உள்ளது. கீழடியில் 10 சதவீதம் அளவுக்கே அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் முழுமையான, விரிவான ஆய்வுகள் செய்தால் தமிழர்களின் வரலாறை முழுமையாக கூற முடியும். கீழடி அகழாய்வு முடிவுகள் ஒரு நகர நாகரிகம் இருந்ததை உலக அரங்கிற்கு தெரியப்படுத்தி உள்ளது. எனவே அனைத்து ஆற்று பகுதிகளிலும் இதுபோல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம்தான் பாண்டியர்களின் துறைமுகமாக இருந்தது. அதுபோன்ற இடங்களில் ஆய்வு முழுமையாக செய்யப்பட்டு இருந்தால் தமிழர்கள் பற்றிய மேலும் பல உண்மைகளை கண்டறிந்து இருக்கமுடியும். அப்போது சிறிய மீனவ கிராமமான அழகன்குளம், தற்போது வீடுகள் நிறைந்துள்ள நிலையில் அங்கு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வது சிரமமானது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள தொல்லியல் மேடுகளை காப்பாற்றுவது அவசியம். அப்போதுதான் நமது வரலாற்றை ஆதாரத்துடன் தேட முடியும். காவிரிப்பூம்பட்டினம், ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் தமிழக அரசால் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் அதில் பெரிய அளவிற்கான முடிவுகளை எதிர்பார்க்க முடியவில்லை. கீழடியில் நடைபெறும் இந்த அகழாய்வு பணிகள் இன்னும் 15 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். ஓரிரு ஆண்டுகள் ஆய்வு நடத்தினால், அதனால் முழுமையான பயன் இருக்காது. தமிழர்களை பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்