நலவாரியத்தில் பதிவு பெற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் உயர்வு அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவிப்பு

நலவாரியத்தில் பதிவு பெற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் க.பாண்டிய ராஜன் அறிவித் துள்ளார்.

Update: 2019-10-26 23:22 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் 33 ஆயிரத்து 575 நாட்டுப்புற கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்குவதற்கான அரசாணை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் கடந்த மாதம் 17-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி, நாட்டுப்புற கலைஞர்களின் பெண் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு 10-ம் வகுப்புக்கு ரூ.1,000, 12-ம் வகுப்புக்கு ரூ.1,500, பட்டப்படிப்புக்கு ரூ.1,500 ஆண்டுந்தோறும் வழங்கப்படும். விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு ரூ.1,750, முதுகலை பட்டப்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம், தொழில்நுட்ப படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.4 ஆயிரம், முதுகலை தொழில்நுட்பம் படிப்பவர்களுக்கு ரூ.6 ஆயிரம், விடுதியில் தங்கி முதுகலை தொழிற்படிப்புகள் படிப்பவர்களுக்கு ரூ.8 ஆயிரம், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்பவர்களுக்கு ரூ.1,200 ஆண்டுந்தோறும் வழங்கப்படும்.

திருமண நிதி உதவியாக மகன், மகள்களுக்கு ரூ.5 ஆயிரம், பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவியாக ரூ.6 ஆயிரம், கருச்சிதைவு, கருக்கலைப்பு நிதி உதவியாக ரூ.3 ஆயிரம் கொடுக்கப்படும்.

நாட்டுப்புற கலைஞர்களுக்கு மூக்குக்கண்ணாடி வாங்குவதற்கான உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.1,500, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.5 ஆயிரம், விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சம் என்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்கள் இந்த நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தங்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதுவரை உறுப்பினர்களாக பதிவு செய்யாத கலைஞர்கள் புதிதாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட மண்டல கலை பண்பாட்டு மையங்களின் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்