நடிகர் சங்க சிறப்பு அதிகாரி நியமனத்துக்கு தடை இல்லை; ஐகோர்ட்டு உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அன்றாட நிர்வாக பணிகளை கவனிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-11-08 23:35 GMT
சென்னை, 

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் நடிகர் கார்த்தி சார்பில் இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று மாலை அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தில், ‘2015-ம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் 2018-ம் ஆண்டே முடிந்துவிட்டது. இப்போது நடிகர் சங்கத்துக்கு நிர்வாகிகள் யாரும் இல்லை என்பதால், அன்றாட பணிகளை மேற்கொள்ள அரசு ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது. இதில் எந்த தவறும் இல்லை’ என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கே.கல்யாணசுந்தரம், சிறப்பு அதிகாரியை நியமித்த அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும், இந்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்