பொதுநல வழக்கு தொடரும் முன்பு களஆய்வு செய்ய வேண்டும் ஐகோர்ட்டு கருத்து

பொதுநல வழக்கு தொடர்வதற்கு முன்பு அதுதொடர்பாக களஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2019-11-11 23:30 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நேற்று பதவி ஏற்றார். முதல் அமர்வில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

அப்போது வக்கீல் சூர்யபிரகாசம் என்பவர் ஆஜராகி, ‘டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதை தடுக்கக்கோரி பொதுநல வழக்கு தொடர உள்ளேன். அந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கைவிடுத்தார்.

அதற்கு நீதிபதிகள், ‘இந்த பிரச்சினை நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் இருக்கிறது. பாட்னா ஐகோர்ட்டிலும் இதுதொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, அவசரமாக வழக்கை தாக்கல் செய்யாதீர்கள். மாசு குறித்தும், அதை தடுப்பது குறித்தும் களஆய்வு மேற்கொண்டு விரிவான, தெளிவான வழக்காக தாக்கல் செய்யவேண்டும். விவரங்கள் எதுவும் இல்லாமல் பொதுநல வழக் குகளை தாக்கல் செய்யக்கூடாது’ என்று கூறினர்.

மேலும், அதே வக்கீல் டெங்கு காய்ச்சல் தொடர்பாக தொடர்ந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், சென்னையில் எந்த பகுதியில் மழைநீர், கழிவுநீர் தேங்குகிறது? எங்கு குப்பைகள் அகற்றப்படவில்லை? எந்த பகுதியில் அதிகமாக காய்ச்சல் பரவுகிறது? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு வக்கீல், சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இவைகளை ஆய்வு செய்து கூறுவது கடினம் என்றார். உதவியாளர்கள் சிலரை நியமித்து களப்பணி மேற்கொள்ள வேண்டும். பொத்தாம் பொதுவாக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யக்கூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தற்காலிக எழுத்தர்கள் பணி தொடர்பாக 2005-ம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

அரசு தரப்பும், மனுதாரர் தரப்பும் தெரிவித்த சம்மதத்தின் அடிப்படையில்தான் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அப்படி இருக்கும்போது தமிழக அரசு இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் மேல்முறையீடு செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக அபராதம்கூட விதிக்க முடியும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், அந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்