எடப்பாடி பழனிசாமியுடன், ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை சந்திப்பு; குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை

இறந்த ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரிக்கை விடுத்தார்.

Update: 2019-11-15 23:00 GMT
சென்னை, 

இறந்த ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரிக்கை விடுத்தார்.

முகாம் இல்லம்

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தந்தை அப்துல் லத்தீப் முறையிட்டு வருகிறார்.

சென்னையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய முகாம் இல்லத்தில் சந்தித்து அப்துல் லத்தீப் மனு கொடுத்தார். அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் சென்றார்.

பின்னர் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கூறியதாவது:-

உடனடியாக கைது

என்ன நடந்தது என்பதை முதல்-அமைச்சரிடம் விளக்கி கூறினேன். அவர் மிகுந்த கவனத்துடன் கேட்டறிந்தார். தனது வருத்தத்தையும் என்னிடம் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 3 குழுக்களை அமைத்து விசாரிக்கின்றனர்.

அடுத்த கட்டமாக இந்த விசாரணை எப்படி போகிறது என்பதை பார்த்து விட்டு தான், சி.பி.ஐ. விசாரணையை கோர முடியும். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.

மகள் எழுதிய கடிதம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்து இருக்கிறார். அவரது நடவடிக்கையில் முழுநம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக என் மகளுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மாநில அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றால் தான் அடுத்தகட்ட விசாரணை குறித்து பேச முடியும். இதுகுறித்து விரைவில் கவர்னரையும் சந்தித்து முறையிட இருக்கிறேன். கோட்டூர்புரம் போலீசாரும், ஐ.ஐ.டி. நிர்வாகமும் எனது மகள் எழுதிய கடிதத்தை மறைத்து விட்டனர். இதில் பணமும் பரிமாறப்பட்டு இருக்கிறது என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே, நீதி விசாரணை பற்றியும் முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.ஜி.பி.யிடம் புகார்

இதற்கிடையே போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதியை சந்தித்தும் அப்துல் லத்தீப் புகார் கொடுத்தார்.

பின்னர் அப்துல் லத்தீப் நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. அவள் இறந்த அறையை இன்னும் ‘சீல்’ வைக்கவில்லை. கண்காணிப்பு கேமரா காட்சிகளை என்னிடம் காட்ட வேண்டும். அவள் எழுதிய கடிதத்தில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான், தனது சாவுக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி அந்த பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்