தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழையும் சில மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-11-20 07:59 GMT
சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  தமிழகத்தில் பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு 9 % குறைவாக பெய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடல் சென்றதால் மழை குறைந்ததாக அவர் குறிப்பிட்டார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளது என்றும் புவனகிரியில் அதிகபட்சம்  8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்