தமிழ்நாட்டில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி: பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி

தமிழ்நாட்டில் புதிதாக 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-27 23:30 GMT
சென்னை, 

கடந்த ஆகஸ்டு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நிருபர்களிடம் கூறும்போது, ‘இந்தியாவில் டாக்டர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த ஆண்டில் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.

மத்திய மந்திரியின் அறிவிப்பு வந்த உடன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை என்று குறிப்பிட்டு, அந்த இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற் கான திட்ட அறிக்கையும் தமிழக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதல்–அமைச்சரின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 23–ந்தேதி மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக் கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் தலா ரூ.325 கோடி செலவில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்தது. 

இந்த 6 மருத்துவக் கல்லூரிகளோடு திருப்தி அடையாத முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்தார். அவருடைய கோரிக்கையை பரிசீலித்து, மத்திய அரசு நேற்று பிறப்பித்த உத்தரவின்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் பங்கு தலா ரூ.195 கோடியும், மாநில அரசின் பங்கு ரூ.130 கோடியும் ஆகும்.

இதுவரையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது வரலாற்று சாதனை ஆகும். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 10 சுயநிதி மருத் துவ கல்லூரிகள், 10 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்லூரிகளும் இருக் கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகை ஆகிய 3 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டதும், நமக்கு 4 ஆயிரத்து 700 மருத்துவ இடங்கள் கிடைக்கும். 

தமிழகத்தில் மேலும் 3 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகை ஆகிய 3 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் கோரிக்கை வைத்தேன்.

மேலும் அதற்கான முன்மொழிவுகள் தமிழக அரசால் மிகவும் குறுகிய காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேவையான நிலமும் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனது கோரிக்கையினை ஏற்று கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகை ஆகிய 3 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் (அக்டோபர்) 23–ந்தேதி தமிழகத்துக்கு ஒரே நேரத்தில் 6 அரசு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதோடு மட்டுமல்லாமல், தற்போது கூடுதலாக 3 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். இதற்கென ரூ.2 ஆயிரத்து 925 கோடி மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் ரூ.1,755 கோடி வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது. தமிழக அரசின் பங்காக ரூ.1,170 கோடி வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்