உள்ளாட்சி தேர்தலில் புதுவியூகம் அமைக்க தி.மு.க. அதிரடி நடவடிக்கை; அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வருகிறார்

உள்ளாட்சி தேர்தலில் புதுவியூகம் அமைக்கும் அதிரடி நடவடிக்கையில் தி.மு.க. களம் இறங்குகிறது. இதற்காக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வருகிறார்.

Update: 2019-11-29 23:15 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் ஆலோசகராக சுமார் 5 ஆண்டுகள் சுனில் என்பவர் செயல்பட்டு வந்தார். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 38 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு அவரது பங்கும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு பிறகு சுனில் மீதான நம்பிக்கை குறைந்து போனதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், உதயநிதியை தி.மு.க. இளைஞரணி செயலாளராக நியமித்தது சரியல்ல என்று சுனில் கருத்து தெரிவித்தது மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தி.மு.க. ஆலோசகராக இருந்த சுனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது, தி.மு.க.வின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் வர இருப்பதாக கூறப்படுகிறது.

இவரது ஆலோசனையின் பேரிலேயே உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. திட்டம் வகுத்துள்ளதாக தெரிகிறது.

பிரசாந்த் கிஷோர் இந்திய அளவில் பிரபலமான அரசியல் ஆலோசகர் ஆவார். இவர் சிட்டிசன்ஸ் பார் அக்கவுண்டபுள் கவர்னன்ஸ் என்ற அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடத்தி வந்தார். அதில் தான் சுனிலும் அங்கம் வகித்தார்.

பிறகு இருவருக்கும் இடையே உருவான கருத்து வேறுபாட்டால், பிரசாந்த் கிஷோர் இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். நரேந்திரமோடி பிரதமர் ஆவதற்கும், நிதிஷ்குமார் பீகார் முதல்-மந்திரி ஆவதற்கும், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முதல்-மந்திரி ஆவதற்கும் பிரசாந்த் கிஷோர் வழங்கிய தேர்தல் ஆலோசனை பிரதான காரணம் என கூறப்படுகிறது.

அண்மையில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற 3 இடைத்தேர்தல்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையே காரணம் என கூறப்படுகிறது. அவர் தற்போது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.

பிரசாந்த் கிஷோரின் தேர்தல் ஆலோசனைகளால், தி.மு.க. மீண்டும் வெற்றிகளை குவிக்குமா? என்பது விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தெரியவரும். அதற்கான வியூகங்களையும் அக்கட்சி வகுத்து வருகிறது.

மேலும் செய்திகள்