கோவையில் தொடர்மழை; 4 வீடுகள் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

கோவையில் தொடர்மழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2019-12-02 02:55 GMT
கோவை,

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளது.  கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.  இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.  எனினும், மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் மழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.  இந்த சம்பவத்தில் 7 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் வரை பலியாகி உள்ளனர்.  மழை பெய்து வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.  அவர்களின் உடல்கள் மண் மூடி  கிடந்துள்ளன.

இதன்பின் காலையில் அந்த வழியே சென்றவர்கள் இதுபற்றி அறிந்து தகவல் அளித்த பின்னரே போலீசார் அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட தொடங்கினர்.  அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா? என்று தேடும் பணி நடந்து வருகிறது.  மீட்பு பணிகளில், காவல் துறையினருடன் தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்