மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு: அரசின் அலட்சியமே காரணம் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

Update: 2019-12-03 06:35 GMT
கோவை,

கோவை மேட்டுப்பாளையத்தில் கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேட்டுப்பாளையத்திற்கு சென்று விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

வீட்டின் சுவர் பழுதடைந்து இருப்பதை அப்பகுதி மக்கள் முன்பே, அரசுக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. இந்த 17பேர் உயிரிழப்புக்கு அரசு-அமைச்சர்களின்  அலட்சியமே காரணம். இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிதி  ரூ.4 லட்சம் போதாது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்