ஐதராபாத்தில் பெண் டாக்டர் கொலை எதிரொலி தமிழகத்தில் உஷார் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. உத்தரவு

ஐதராபாத்தில் பெண் டாக்டர் கொடூரமாக கற்பழித்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உஷார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2019-12-04 22:45 GMT
சென்னை,

தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நேற்று முன்தினம் இரவு தமிழில் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் சுற்றறிக்கை கடிதம் ஒன்றை அவசரமாக அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில் அவர் தமிழிலேயே கையெழுத்திட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

எல்லையை தாண்டி நடவடிக்கை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம், உதவி கோரி போலீசுக்கு வரும் அழைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நேரங்களில் போலீசுக்கு உறுதியான செயல்பாடு கொண்ட கட்டமைப்பு அவசியம் என்பதையும், இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள்மீது எல்லை பிரச்சினை மற்றும் நடைமுறை சிக்கல்கள் போன்ற வரைமுறைகளை தாண்டி, தாமதம் இன்றி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

இதற்காக கூர்மையான செயல்திறனுடன் ஒவ்வொரு போலீசாரும் செயல்பட வேண்டிய நேரம் இது. தொழில் ரீதியான உணர்வோடும், பொறுப்போடும் செயலாற்றாத போலீசார் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

காவலன் செயலி

பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடம் இருந்து வரும் புகார்களின் மீது உடனடியாக உஷார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை குறிப்பிட்ட பாதிப்பில் இருந்து மீட்க போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஐதராபாத் போன்ற சம்பவத்தை தடுப்பதற்காக காவலன் கைபேசி செயலி தமிழக போலீசில் செயல்பட்டு வருகிறது. கட்டணம் இன்றி இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த செயலி குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும், அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்களும் இதுதொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இந்த செயலியின் பயன்பாட்டை கொண்டு செல்ல வேண்டும். வருகிற 10-ந்தேதிக்குள் இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து உரிய பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு டி.ஜி.பி. திரிபாதி சுற்றறிக்கை கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்