137-வது பிறந்தநாள் விழா உலக பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தனி இருக்கை அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்

பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, உலக பல்கலைக்கழகத்தில் பாரதியாரின் பெயரில் தனி இருக்கை அமைக்கப்படும் என அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.

Update: 2019-12-11 23:15 GMT
சென்னை,

வானவில் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த 11 நாட்களாக பாரதி திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. கடைசி நாளான நேற்று பாரதியின் 137-வது பிறந்தநாள் விழா திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் முன்பு கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, ‘நிமிர்ந்த நன்னடை’ என்ற பெயரில் 2 கி.மீ. தூரத்துக்கு நடை உலா நடத்தினர்.

இதையடுத்து, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் கலை, பண்பாட்டுத்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் முன்பு பிறந்தநாள் விழா நடைபெற்றது.

ஜதி பல்லக்கு

இந்த விழாவில் பாரதியின் ஆசையான பொன்னாடை மற்றும் பொற்கிழியுடன் ஜதி பல்லக்கு கொண்டு வரப்பட்டு அதில் பாரதியின் சிலை வைக்கப்பட்டிருந்தது.

அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் மற்றும் எம்.எல்.ஏ. நடராஜன் உள்ளிட்டோர் ஜதி பல்லக்கை தோளில் சுமந்தவாறு திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லம் வரை கொண்டு சென்று அவரது ஆசையை நிறைவேற்றினர்.

தனி இருக்கை

இதையடுத்து அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் சார்பில் தமிழ் பண்பாட்டு மையம், தமிழ் வளர் மையம், சொற்குவை ஆகிய 3 திட்டங்களும் பாரதியின் கனவை நிறைவேற்றுவதற்காக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 5 உலக பல்கலைக்கழகங்களில் தமிழின் சிறப்பை போற்ற இருக்கைகள் அமைப்பதற்கான வேலை நடந்து வருகிறது. ஏற்கனவே ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்துள்ளோம்.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அடுத்து வர இருக்கிறது. அதற்கான ஒப்புதலும் பெற்று இருக்கிறோம். மீண்டும் கூடுதலாக 4 உலக பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். பாரதியாரின் பெயரில் இதுவரை எந்த பல்கலைக்கழகத்திலும் தனி இருக்கை இல்லை. அவரது பெருமையை போற்றும் வகையில், ஒரு உலக பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாடல்கள் டிஜிட்டல் மயம்

பாரதியாரின் பாடல்கள் டிஜிட்டல் மயம் ஆக்குவதற்கான பணி தொடங்கிவிட்டது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 8 லட்சம் பாடல் வரிகள் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டுள்ளது. அதில் பாரதியாரின் பாடல்களும் அடங்கி உள்ளது. விரைவில் டிஜிட்டல் நூலகத்தில் பாரதியின் பாடல்கள் முழுமையாக இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்