பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் பதவிகள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் தேர்தல் அதிகாரியிடம் புகார்

திருச்சி அருகே பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-12-13 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 35 கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 23 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும் வருகிற 30-ந்் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

இந்தநிலையில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் 4-வது வார்டு, வலையூர் பஞ்சாயத்து, 94 கரியமாணிக்கம் பஞ்சாயத்து பகுதிகளை உள்ளடக்கியது. இதில் வலையூர் பஞ்சாயத்தில் 1,791 வாக்காளர்கள் உள்ளனர். இதனால் இந்த கிராம மக்களின் ஓட்டு மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதாக அரசியல் பிரமுகர்கள் கருதுகிறார்கள்.

ரூ.30 லட்சத்துக்கு ஏலம்

இதற்கிடையே, வலையூர் கிராமத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் நேற்று முன்தினம் இரவு கூட்டம் நடத்தினர். அப்போது, மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ரூ.16 லட்சம், வலையூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ.10 லட்சம், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.3 லட்சம், ஊராட்சி அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் என்று பேசி ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஏலம் எடுத்த நபருக்கு மட்டுமே இந்த கிராம மக்கள் ஓட்டு போட வேண்டும். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் ரூ.30 லட்சம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் கட்டுவதற்காக பயன்படுத்தப்படும். அதனால் இந்த பதவிகளை ஏலம் எடுத்தவர்கள் தவிர, வலையூர் கிராமத்தில் இருந்து வேறுயாரும் தேர்தலில் நிற்கக்கூடாது என்று ஊர் முக்கியஸ்தர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

அதிகாரியிடம் புகார்

அத்துடன் இந்த கட்டுப்பாட்டை மீறி யாராவது தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தால் அவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஜனநாயக ரீதியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்று நினைத்த இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விரக்தி அடைந்தனர்.

இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகத்திடம் நேற்று புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுவனூர் போலீசாரும் வலையூர் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் வலையூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்