“இலங்கையில் சிங்கள விரிவாக்கம் தீவிரமாகிறது” வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் கவலை

இலங்கையில் சிங்கள விரிவாக்கம் தீவிரமாகிறது என்று இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் கவலை தெரிவித்தார்.

Update: 2020-01-11 22:30 GMT
சென்னை, 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 6-ம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரியும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

விழாவில், அவர் பேசியதாவது:-

இலங்கை, சிங்கள மக்களின் நாடு என்றும், தமிழர்கள் வந்தேறி குடிகள் என்றும் அவர்களுக்கென்று எந்த உரிமைகளும் தரத்தேவையில்லை என்ற கருத்தை இலங்கை சுதந்திரம் அடைந்த காலந்தொட்டே சிங்கள மக்கள் மனதில் அரசியல்வாதிகள் விதைத்து வந்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி இலங்கை ஒரு சிங்கள நாடு என்பதில் உறுதியாக உள்ளார். ஒருவேளை விரைவில் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை பெற அவர் இப்படி கூறுகிறார் என்று நினைக்கிறேன். இதுவரை இல்லாத அளவு சிங்கள விரிவாக்கம் நடந்து வருகிறது.

பயங்கரவாத தடை சட்டத்தை ஒரு கருவியாக கையாண்டு தமிழ் சிவில் எதிர்ப்புகளை, தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை அரசு அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் தாமாகவே பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இன்று பொதுமக்கள் தலைமையேற்றுள்ள தமிழ் தேசிய அரசியலை மேலும் வலுவாக்கி இருக்கக்கூடிய சர்வதேச நிலைமைகளையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, இலங்கை அரசின் அப்பட்டமான இன ஒழிப்பு நடவடிக்கைகளை பற்றி பேசவும், அதனை எதிர்க்கவும், தடுக்கவும், போர்க்குற்றங்கள் மற்றும் தமிழ் இன ஒழிப்பு மீதான சர்வதேச விசாரணையை கொண்டு நடத்த அழுத்தங்களை பிரயோகிக்கவும் நாம் மீண்டும் மீண்டும் தேசமாய் திரட்சி பெற வேண்டி உள்ளது.

நடைபெறும் நிகழ்வுகளை பார்த்தால் எதிர்காலத்தில் இலங்கை தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான தடயங்களை தேடவேண்டிய நிலையே ஏற்படப்போகிறது என்று எண்ண வேண்டியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டுமானால் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் தமிழ் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், உரிய செயற்பாடுகளில் இறங்கவேண்டும்.

எங்களது மக்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய உணர்வு மற்றும் அறம் சார்ந்த தார்மீக கோட்பாட்டை தமிழக மக்களும் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் வேறு நீங்கள் வேறு அல்ல. எங்கள் பிரச்சினையை உங்கள் பிரச்சினையாக கருதுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்